ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்த படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் உலக அளவில் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் வெற்றி ரஜினிகாந்த்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவரது ரசிகர்களால் கருதப்பட்டது.
ஏனெனில் இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் போதிய வசூலை ஈட்டவில்லை இதனால் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் உலாவ ஆரம்பித்தன. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் படங்கள் கன்டென்ட் ரீதியாக விமர்சனத்தை சந்தித்தாலும் வசூல் ரீதியாக 100 கோடியை அசால்ட்டாக வசூலிக்கிறது என்ற பேச்சும் எழுந்தது.
எனவே விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நாற்காலியை விட்டு விரைவில் இறங்கிவிடுவார் என்ற குரல்களும் பலமாக எழும்பின. அது மட்டுமின்றி இரண்டு படங்களின் தோல்விகளால் 150 கோடி ரூபாய் சம்பளம் என்ற நிலையில் இருந்து 80 கோடி ரூபாய் சம்பளம் என்ற நிலைக்கு ரஜினிகாந்த் இறங்கிவிட்டார் எனவும் கோலிவுடில் பேச்சுக்கள் இருந்தன.
ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின்படி ரஜினிகாந்த்தின் சம்பளம் ஜெயிலர் படத்துக்கு 80 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. இருப்பினும் ஜெயிலர் படம் சம்பாதிக்கும் லாபத்தில் பாதிக்கு பாதி தனக்கு வர வேண்டும் என அவர் சன் பிக்சர்ஸிடம் அக்ரிமெண்ட் போட்டதாக மேற்கொண்டு தகவல்கள் பரவின. இதனை அடுத்து ரஜினிகாந்த்தின் சம்பளம் 150 கோடியை ஜெயிலர் படத்தில் நெருங்கிவிட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த பட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 170ஆவது படத்திற்கு அவரது சம்பளம் கிட்டத்தட்ட 200 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஜெயிலர் படத்தின் வணிக ரீதியான வெற்றிதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68 வது படத்தில் விஜய்க்கான சம்பள பேச்சுவார்த்தை 175 கோடி ரூபாயில் இருந்துதான் ஆரம்பித்ததாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.தற்போது வெளியாயிருக்கும் ரஜினியின் சம்பளம் குறித்த தகவலை வைத்து பார்க்கையில் விஜய் ரஜினிகாந்த் ஓரம் கட்டிவிட்டார் என்றும்; ரஜினிகாந்த்தை விஜயால் எப்போதும் நெருங்க முடியாது என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.





