தெலுங்கு படங்கள் என்றாலே மசாலா தனங்கள் நிறைந்திருக்கும். நம்ப முடியாத அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகளும் இருக்கும். பெரும்பாலும் வில்லன்களை பழிவாங்கும் ஹீரோக்களின் ஆக்ரோஷ கதைகளாக தான் இருக்கும். தவிர, தெலுங்கு படங்களில் நடிக்கும் நாயகிகளுக்கு பெரும்பாலும் கவர்ச்சியாக நடனம் ஆட மட்டுமே அதிக வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் அதே நேரத்தில் சில இயக்குனர்களின் சமீபத்திய படங்கள் அதில் இருந்து மாற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக பாகுபலி, புஷ்பா, சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் போன்ற படங்களில் கதைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதிலும் லக்கி பாஸ்கர் படம் தெலுங்கு படமாக இருந்தும் சிறிதளவும் மசாலா தனம் இல்லாத ஒரு யதார்த்த படமாக வந்து பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
ஆக்ஷன் அதிரடி காட்சிகள் நிறைந்த ஒரு கதைக்களத்தில், செம்மர கடத்தலை மையப்படுத்திய எடுக்கப்பட்ட படம் புஷ்பா, கடந்த 2021ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வெளியானது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. இந்தியா முழுவதும் இந்த படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக வருகிற டிசம்பர் மாதம் 5ம் தேதி புஷ்பா 2 படம் வெளியாகிறது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், படப்பிடிப்பில் தாமதம் நீடித்ததால் 3 மாதங்கள் 20 நாட்கள் தாமதமாக வரும் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் போல, புஷ்பா 2 படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஐட்டம் பாடலுக்கு ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குகிற முதல் நடிகராக விஜய் இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. இப்போது அவர் நடித்து வரும் தளபதி 69 படத்துக்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் ரஜினி, கமல், அஜீத்குமார் எல்லாம் ரூ. 150 கோடி தான் சம்பளமாக வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் நடிக்க அல்லு அர்ஜூனுக்கு சம்பளமாக ரூ. 300 கோடி தரப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல் படத்தின் இயக்குனர் சுகுமாரனின் சம்பளம் ரூ. 100 கோடி என்றும் தெரிய வந்துள்ளது. நடிகர் விஜயை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அல்லு அர்ஜூன் என்ற தகவல் தளபதி விஜய் ரசிகர்களை, தவெக கட்சி தொண்டர்களை விரக்தியடைய செய்துள்ளது. அரசியல் இருந்துக்கொண்டே தளபதி தொடர்ந்து நடித்தால், அடுத்த படத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவார் என்றும் கூறி வருகின்றனர்.





