பல்வேறு பிரச்னைகள் சர்ச்சைகளுக்கு பின்னால், 2 ஆண்டுகள் கழித்து இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை பற்றிய நயன்தாரா; பியான்ட் த பேரி டேல் என்ற ஆவணப்படம் வெளியாகி உள்ளது. இந்த ஆவணப் படத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, அவர் சந்தித்த பிரச்னைகள், சினிமா பயணம், காதல் திருமண வாழ்க்கை என பல விஷயங்கள் வருகின்றன.
அதில் தனது முந்தைய காதல் பற்றி நடிகை நயன்தாரா வெளிப்படையாக பல விஷயங்களை பேசியிருக்கிறார். அதில் நயன்தாரா கூறியதாவது, என்னுடைய முதல் ரிலேஷன்ஷிப்பை எடுத்துக் கொண்டால் முழுக்க முழுக்க அது நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது. நம்பிக்கை மட்டும்தான் இருவருக்கும் இடையே நல்ல உறவை வைத்திருக்கும்.
காதலை தாண்டியும் நம்பிக்கை இருக்க வேண்டும். என் காதலரும் என்னை முழுமையாக காதலிக்கிறார் என்பதை நம்ப வேண்டும். 100 சதவீதம் நாமும் காதலிக்க வேண்டும். நான் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறேன் என்னுடைய முந்தைய ரிலேஷன்ஷிப் பற்றி இதுவரை நான் எங்குமே பேசியது இல்லை.
ஆனால் எல்லோரும் நிறைய விஷயங்களை அவர்களே நினைத்து கொள்கின்றனர். எந்த கதையை நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டுமே அவர்கள் நம்புகின்றனர். ஆனால் அந்த கதைகள் எல்லாம் மிகவும் மோசமானவை.
என்னுடைய மனதை காயப்படுத்திய விஷயம் என்னவென்றால், என்னைப் பற்றிய கதைகளை என்ன, ஏது என்று கூட விசாரிக்காமல் அவர்களாகவே ஒன்றை நினைத்துக் கொண்டதுதான். இன்று வரை எனது ரிலேஷன்ஷிப்பில் சம்பந்தப்பட்ட ஆண்கள் ஒருவரைக் கூட யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏன் இதை செய்தீர்கள், உண்மையில் நடந்தது என்ன என்று யாரும் அவர்களை கேட்டதே இல்லை.
எப்போதும் ஒரு பெண்ணை மட்டுமே இதுகுறித்து கேள்வி கேட்கிறார்கள். இது நியாயமே இல்லை. என்னை கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கேள்வி கேட்க வேண்டும், அதுதான் நியாயம். நான் ஒருத்தி மட்டும் தான் இங்கே ரிலேஷன்ஷிப்பில் இருந்து இருக்கிறேனா அல்லது நான் ஒருத்தி மட்டும் தான் காதல் செய்துள்ளேனா, இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று அந்த ஆவணப்படத்தில் நயன்தாரா ஆதங்கமாக பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.





