தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. நயன்தாரா, திரிஷா இருவருக்கும்தான் போட்டி என்று சொல்லும் அளவுக்கு முன்னணி ஹீரோக்களுக்கு திரிஷா இப்போது ஜோடியாக நடித்து வருகிறார். குறிப்பாக பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு திரிஷாவில் லெவலே மாறிவிட்டது.
தொடர்ந்து விஜயுடன் லியோ படத்தில் நடித்த திரிஷா பிறகு அஜீத்குமாருடன் விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் விஸ்வம்பரா என்ற படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார். 18 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவியுடன் திரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தக்லைப் படத்திலும் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதுதவிர 2 மலையாள படங்களிலும் திரிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷா மீண்டும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தில் திரிஷா, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அமீர் இயக்கத்தில் உருவான இந்த படம் சூர்யா, திரிஷா இருவருக்குமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படமாக இருந்தது.
இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு படத்திலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். சூர்யா நடித்த படங்களில் ஆறு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகின.
இந்நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தில் அவருக்கு ஜோடியாக, நடிகை திரிஷா நடிக்கிறார். சூர்யா 45 படத்தில் 3வது முறையாக சூர்யா, திரிஷா ஜோடி இணைகிறது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சூர்யா 45 படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்ற தகவலை கூறியிருக்கிறார்.





