நடிகர் விஜய் கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்து வருகிறார். 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளை தொடர்ந்து 2025ம் ஆண்டில் இந்த விழா 3வது ஆண்டாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர் முதல் 3 இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற நிலையில், அவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரம் 2ம் பரிசாக ரூ. 15 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 10 ஆயிரம் என ரொக்கப் பரிசு வழங்கி, கல்வி விருது சான்றிதழ் வழங்கி நடிகர் விஜய் கௌரவித்து வருகிறார்.
மேலும் பெற்றோருடன் அந்த மாணவ மாணவியரை மேடைக்கு அழைத்து தனது கையால் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து அந்த மாணவ மாணவியர் அவர்களது பெற்றோர்களை விஜய் கௌரவப்படுத்துகிறார். முதல் ஆண்டில் ஒரு நாளிலும் 2வது நாளில் 2 நாட்களும் 3வது ஆண்டில் தற்போது 3 நாட்களும் இந்த விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது.
முதல் நாளான இன்று சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை முதல் இந்த விழா நடந்து வருகிறது. இதில் 68 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று ரொக்கப் பரிசுகளை மாணவ மாணவியருக்கு வழங்கினார்.
தவெக கட்சி தலைவரான நடிகர் விஜய் விழாவில் பேசியதாவது, சாதி மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனைகளின் பக்கம் போய் விடாதீர்கள். உங்கள் எண்ணத்தை பாதிக்க அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் சாதி மதம் பார்த்து பொருளை விளைவிப்பதில்லை. தொழிலாளர்கள் சாதி மதம் பார்த்து பொருட்களை உற்பத்தி செய்வதில்லை.
வெயில் மழையில் எல்லாம் சாதி மதமா இருக்கிறது? போதை பொருட்களை அறவே ஒதுக்கியது போல் சாதி மதத்தையும் தூரமாக ஒதுக்குவது நல்லது. பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். யுபிஎஸ்சி சிவில் சர்வீஸஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுவது போல் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று நடிகர் விஜய் இவ்விழாவில் பேசியிருக்கிறார்.





