நடிகர் முரளியின் மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிப்பில் தந்தையை போலவே தனது திறமையை வெளிப்படுத்தினார். அடுத்து சண்டி வீரன் ஈட்டி இமைக்கா நொடிகள் பரதேசி 100 கணிதன் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். டைரக்டர் பாலாவின் பரதேசி படத்தில் வேற லெவலில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் அதர்வாவுக்கு பெரிய அளவில் வெற்றிப் படங்கள் எதுவும் அமையாத நிலையில், சில ஆண்டுகளாக அவர் நடிக்காமல் இருந்தார். இந்த சூழலில் துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ரகுமான், சரத்குமார் போன்ற சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். நேற்று இந்த படம் வெளியானது.
நிறங்கள் மூன்று படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, இந்த படத்தில் ரகுமான் பள்ளி ஆசிரியராக நடித்திருக்கிறார். அவரது மகள் அம்மு அபிராமி அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை காதலிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார் நேர்மை இல்லாத போலீஸ்காரராக நடித்திருக்கிறார். அதர்வா இயக்குனராக நடித்திருக்கிறார். அவருடைய கதையை ஒரு இயக்குனர் திருடி படம் எடுத்து விடுகிறார். இந்த திருட்டு சம்பந்தமாக தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அதர்வா போராடுகிறார். இந்த 3 கதையும் ஒன்றாக இணைக்கும் கதைதான் நிறங்கள் மூன்று படத்தின் கதை.
ஒரு பெண் கடத்தப்படுகிறார். அந்த கடத்தலை அம்மு அபிராமியின் காதலன் பார்த்து விடுகிறார். அதே நேரத்தில் அம்மு அபிராமியும் காணாமல் போகிறார் அப்போது கடத்தப்பட்டது அம்மு அபிராமியா, அனைத்து கதாபாத்திரங்களையும் இணைக்கும் கதை தான் நிறங்கள் மூன்று. இந்த படத்தில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் கதாபாத்திரத்தில் வருபவர்களின் ஒரு பக்கத்தை நல்ல விதமாக சொல்லிவிட்டு அவர்களுக்கு காட்டப்படும் மற்றொரு பக்கம் மிகவும் கேவலமாக இருக்கிறது.
அதனால் படம் பார்க்கிறவர்களுக்கு அந்த கதாபாத்திரத்தோடு கனெக்ட் ஆகவே முடியவில்லை. இதுதான் படத்தில் இருக்கிற மிகப்பெரிய மைனஸ். குறிப்பாக அதர்வாவின் கேரக்டர் தலைவலியான கேரக்டராக இருக்கிறது. அவர் இந்த படத்தில் கதை ஆசிரியராக இருப்பதால், அனைத்து போதை மருந்துக்கும் அடிமையாக இருக்கிறார். கஞ்சாவை போட்டுக்கொண்டு கதை எழுதினால் கதை நல்லா வரும் என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் படத்தின் பல காட்சிகளில் கஞ்சாவை எப்படி பயன்படுத்துவது என்பது போன்ற காட்சிகளே அடுத்தடுத்து வருவதால் என்னடா இது என்று தோன்றுகிறது. இந்த படம் பார்த்து நமக்குதான் கஞ்சா அடித்தது போல் ஆகி தலை சுற்றுகிறது. இந்த படத்தின் கதை ஐடியா நன்றாக இருந்தாலும் படமாக்கப்பட்ட விதத்தில் டைரக்டர் கோட்டை விட்டுவிட்டார். அதனால் படம் எப்போ முடியும் என்ற மனநிலை வந்து விடுகிறது என்று ப்ளு சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.





