தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார். அவர் ஆட்சி பொறுப்புக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. இந்த நிலையில் அவர் நடித்த கடைசி படம் ஜனநாயகன். நேற்று முன்தினம் வெளியாகி திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதியவர் பாடல் ஆசிரியர் விவேக். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கவிஞர் விவேக் நடிகர் விஜய் குறித்த பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். குறிப்பாக நடிகர் தனுஷ் நடித்த படத்தை விஜய் தியேட்டருக்கு பார்க்க சென்ற அனுபவம் குறித்து அவர் புதிய தகவலை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பாடலாசிரியர் விவேக் கூறியதாவது, வாரிசு படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்த போது நான் அங்கே சென்றிருந்தேன். அந்த நேரத்தில் தான் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. அந்த படத்தில் நானும் பணியாற்றி இருந்ததால் அன்று இரவே சென்று அந்த படம் பார்த்து விட்டு வந்தேன்.
மறுநாள் அந்த படம் குறித்து விஜயிடம் பேசினேன். அப்போது படம் நன்றாக இருக்கிறது என்றும் சொன்னேன். அப்போது அவர், என்னை ஏன் அழைக்காமல் சென்றாய் என்று என்னிடம் செல்லமாக கடிந்து கொண்டார். அப்புறம் இன்னைக்கு டிக்கெட் போடு. நாம ரெண்டு பேரும் படத்துக்கு போவோம் என்றார்.
நானும் அவரை எப்படி தியேட்டருக்குள் அழைத்துச் செல்வது என்று பயந்தேன். ஆனாலும் அவருக்கு யாரும் அறியாமல் தியேட்டரில் சென்று படம் பார்க்கும் வித்தைகள் தெரிந்திருந்தது. அப்படி அன்று இரவு திரையரங்குக்கு சென்றபோது அவர் எனக்கு முன்பாக சென்றார். அப்போது டிக்கெட் பரிசோதிக்கும் ஊழியர் விஜயை யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடம் டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டுவிட்டார்.
அதற்கு அவர், டிக்கெட் என்னிடம் இல்லை என்று கூறி பின்னால் நின்ற என்னை கை காட்டினார். என்னிடம் இருந்த ஆன்லைன் டிக்கெட்டை காட்டி விட்டு உள்ளே சென்றோம். எங்களுடன் நண்பர் ஜெகதீஷூம் வந்திருந்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறியதும் முதல் வேலையாக நடிகர் தனுஷூக்கு விஜய் போன் செய்தார். படம் சூப்பராக இருக்கு என்று பாராட்டினார் என்று கவிஞர் விவேக் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





