இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் 20ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகை பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பேசியதாவது, சூரி உன்பேரை சொன்னவுடன் நீ கூட்டீட்டு வந்த உன்னோட ஆட்கள் யாரும் விசில் அடிக்கல, கைதட்டல, என்றார். அப்போது எழுந்து பேசிய நடிகர் சூரி, இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் என்னோட அன்பு தம்பிகள், அன்பு அண்ணன்கள் சார். நீங்கள் பேசும்போது குறுக்கீடு செய்யக் கூடாது என்பதற்காக அமைதியாக இருக்கிறார்கள் சார் என்றார்.
தொடர்ந்து பேசிய இளையராஜா, முதலில் நான் பேச வந்ததும் எனக்கு கைதட்டல் வருமான்னு எதிர்பார்த்தேன். எனக்கு யாரும் கைதட்டலே. அப்புறம் சூரின்னு உன்பேரை சொல்லி கைதட்டல் வாங்கலாமுன்னு பார்த்தால் அப்புறமும் கைதட்டல் வரலே என்றும் சூரியை கிண்டலடித்து பேசினார்.
இளையராஜா விழாவில் பேசுகையில், ஜனனி ஜனனி என்ற பாடல் நான் பாடும்போது அங்கு இருந்ததா, அது தானாக உருவானது. அதுபோல்தான் ஒரு படம் உருவாவதும். தினம் தினம் உன் நெனப்பு, என் நெனப்பு என்னை வளைக்கிறதே, என்னை துளைக்கறதே… ஏண்டா இந்த உலகத்துல பொறந்தோம் என்கிற என் நினைப்பு என்னையே வளைக்குதே, தொளைக்குதே என்று பாடியிருந்தேன்.
ஆனால் படத்தில் அதை வந்து தெனம் தெனம் உன் நினைப்புன்னு கதாநாயகிக்கு மாற்றி போட்டாச்சு. இந்த பாடலை சஞ்சீவ் சுப்ரமணியத்தை வைத்து பாட்டை பாடி எடுத்துவிட்டேன். அதன்பிறகு வெற்றிமாறன் வந்து உங்க குரலில் இந்த பாட்டு வேண்டும் என்று கேட்டார். அதனால் சஞ்சீவ் சுப்ரமணியத்துக்கு மனசுலே மனசுலே ஒரு மாதிரியாக இருக்குங்கற பாட்டை கொடுத்து பாட வெச்சேன்.
அதே மாதிரி நடிகர் சேத்தன் இந்த படத்துல ரொம்ப பிரமாதமா நடிச்சிருந்தார். அவரை குடும்பத்தோட என் ஸ்டுடியோவுக்கு வரவழைச்சு நான் பாராட்டினேன். இது என் வாழ்க்கையில் ரொம்பவும் பெரிய விஷயம் என்று சேத்தன் சந்தோஷப்பட்டார். ஆனால் வெற்றிமாறன் நான் பாராட்டின அந்த காட்சிகளை எல்லாம் படத்தில் வைக்காமல் நீக்கி விட்டார், என்று இந்த விழாவில் இளையராஜா ஜாலியாக பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.





