தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் சித்தார்த் நாயகனாக அறிமுகமானார். அதே போல் இந்த படத்தில் மணிகண்டன், நகுல், பரத் மற்றும் தமன் ஆகியோரும் அறிமுகமாகினர். இதில் தமன் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார். பரத், நகுல் உள்ளிட்டோர் பல படங்களில் நாயகனாக நடித்துள்ளனர்.
சித்தார்த் நடித்த பாய்ஸ் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் சூர்யா, மாதவன் ஆகியோரும் நடித்திருந்தனர். இது 3 ஹீரோக்கள் இணைந்து நடித்த படமாக இருந்தது. ஆனால் 3 பேருமே வளரும் கலைஞர்களாக தமிழ் சினிமாவில் ஆரம்ப நிலையில் இருந்தனர். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.
நடிகர் சித்தார்த் தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் பல படங்களில் நடித்தார். தமிழில் சித்தார்த் நடித்த உதயம் என்எச் 4. ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, அருவம், அரண்மனை 2, சித்தா, சமீபத்தில் வெளியான இந்தியன் 2 வரை பல படங்களில் சித்தார்த் நடித்திருக்கிறார்.
இதில் சித்தார்த் நடித்து தயாரித்த படம் சித்தா, கடந்தாண்டில் வெளியாகி பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற உணர்வுபூர்வமான படமாகும். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து இந்த படம் பேசியிருந்தது. இதில் சித்தார்த் நடிப்பு வேற லெவலில் இருந்து ரசிகர்களை மிரட்டியது.
இந்நிலையில் வருகிற 29ம் தேதி நாளை மறுதினம், சித்தார்த் ஆஷிகா ரங்கநாத் நடித்த மிஸ் யூ என்ற படம் ரிலீஸ் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர்கள் ஜீவா, அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம் படத்தை இயக்கிய ராஜசேகர், மிஸ் யூ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது வருகிற 29ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகாது என்று படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் புயல் எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை வாய்ப்பு உள்ளதாக அரசு எச்சரித்துள்ளது. அதன்காரணமாக கனமழை நேரத்தில் படத்தை வெளியிட வேண்டாம் என படக்குழு முடிவு செய்து, மிஸ் யூ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மழை ஓய்ந்த பிறகு ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளது.





