தமிழகத்தில் பேசிப் பேசியே ஆட்சியை பிடித்தவர்கள் என்று சில அரசியல் தலைவர்களை சொல்வது நீண்டகாலமாக இருக்கிறது. ஏனெனில் அரசியல்வாதிகளை பொருத்தவரை நா வன்மை மிக்கவர்களாக இருக்கின்றனர். அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்களின் குரலில் அந்த ஆளுமையும், வசீகரமும் இருந்தது என்றால் அது மிகையல்ல.
அதே போல் வைகோ, நாஞ்சில் சம்பத், தமிழருவி மணியன், திருச்சி சிவா, சீமான், தொல் திருமாவளவன் போன்ற சில அரசியல் பிரபலங்களின் எழுச்சி பேச்சையும் மக்கள் விரும்பி ரசிப்பதுண்டு. மாற்று கட்சியினராக இருந்தாலும் மேடைகளில் அவர்களது சொல்லாடலும், பேச்சாற்றலும் கவரும் விதமாக இருக்கும். அந்த வகையில் நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்கவும் பலர் ஆர்வம் காட்டுவர்.
துவக்கத்தில் நாஞ்சில் சம்பத் மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர். அந்த கட்சியில் வைகோவுக்கு அடுத்தபடியாக பேச்சாற்றலில் நாஞ்சில் சம்பத் சிறந்து விளங்கினார். பிறகு ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மதிமுகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியும், இன்னோவா காரும் தரப்பட்டது. பிறகு, 2016 ஜனவரியில் அந்த பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. காரும் திரும்ப பெறப்பட்டது. அதற்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர் பேசி வந்தார். ஆனால் அமமுக என்ற கட்சியை டிடிவி தினகரன் துவங்கிய பிறகு அந்த கட்சியில் இருந்தும் விலகிய அவர் எல்கேஜி, செம்பி, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் கூறியதாவது, இளைஞர்களை ஈர்க்கிற தலைவர்தான் தம்பி விஜய். அவரது வருகைக்கு பிறகு திமுக விழிப்போடு இருக்க வேண்டும். விழிப்போடுதான் இருக்கும். அரசியல் மாநாட்டில் விஜய், தான் யார் என்பதை நிரூபித்து விட்டார். இந்த நாட்டுல கூட்டம் சேர்க்கறது ரொம்ப கஷ்டம். பத்திரிகை, டிவி சேனல்களில் விளம்பரம் தரவில்லை. வாகனங்களை ஏற்பாடு செய்யவில்லை. யாருக்கும் சம்பளம் கொடுத்து கூட்டி வரவில்லை.
அவ்வளவு பெரிய கூட்டத்தை அவரது அரசியல் மாநாட்டுக்கு வரவைத்ததே மிகப்பெரிய விஷயம், சாதனை தான். விஜய் வருகையால் சீமான் கட்சியின் கதை முடிந்தது. இனவாதம், வகுப்பு வாதம் பேசுகிற பாஜ கட்சிக்கும் முடிவு கட்டி விடுவார். அண்ணா திமுகவை விஜய் கண்டுகொள்ளவே இல்லை. ஏற்கனவே அதை எடப்பாடி பழனிசாமி குட்டிச்சுவராக்கி வைத்துவிட்டார். அதனால் வருகிற தேர்தலில் உதயநிதிக்கும், விஜய்க்கும்தான் போட்டியாக இருக்கும் என்று பேசியிருக்கிறார் நாஞ்சித் சம்பத்.





