விஜய் டிவி ஒரு சொல் ஒரு வார்த்தை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜேம்ஸ் வசந்தன். சசிக்குமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்திற்கு இசையமைத்து பெரிய அளவில் பேசப்பட்டார். கண்கள் இரண்டால் பாடல் செம டிரண்டிங் ஆனது. அவ்வப்போது இளையராஜா குறித்து கடுமையாக விமர்சிப்பவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி குறித்து ஜேம்ஸ் வசந்தன், தனது முகநூல் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி முன்னாள் நடத்துனர் கமல்ஹாசன், இப்போது விஜய் சேதுபதி. இருவரும் அவரவர் பாணியில் நிகழ்ச்சியை நடத்துவதும் அதற்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுவதும் இயல்பு தானே. கமல்ஹாசன் எல்லாரிடமும் ரொம்பவும் மென்மையாக, கொஞ்சம்கூட கடிந்து கொள்ளாமல் கண்டிப்பா இல்லாமல் இருக்கிறார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் இயல்பான அதிரடியான பாணியை கண்டு வியந்தவரும் பாராட்டியவரும் இன்று வெறுப்படையும் நிலைக்கு சென்றிருக்கின்றனர். போட்டியாளர்களிடம் பேசும்போது பிரச்னைகளை ஆராய்ந்த போது கமலிடம் பண்பு இருந்தது, ஞானம் இருந்தது, மதிநுட்பம் இருந்தது, சமூகப் பொறுப்பு இருந்தது, ஒவ்வொருவரையும் ஆளுமைகளாகவே பார்த்தார், கையாண்டார். அவர்களை நேரடியாக குற்றப்படுத்தியது இல்லை, சொற்களால் காயப்படுத்தியதில்லை.
அவர்களை மட்டம் செய்ததில்லை. தனிப்பட்ட விதத்தில் தாக்கியதும் இல்லை. அவர்கள் உணர்வுகளை சீண்டியதில்லை. தனக்கு இருந்த உயர் பொறுப்பை கொண்டு அவர்களை சிறுமைப்படுத்தியதில்லை. இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும். இது ஆணாதிக்க உலகம். நம் தமிழ் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதை தான் பிக்பாஸ் வீட்டில் 54 நாட்களாக கண்கூடாக கண்டு வருகிறோம்.
தன்னை கேள்வி கேட்கிற, விமர்சிக்கிற பெண்களை எப்படி ஆண்களெல்லாம் ஒன்று சேர்ந்து கடுமையாக, கொடுமையாக தாக்கி நிலைகுலையச் செய்து மகிழ்கிறார்களோ அதையே நிகழ்ச்சி நடத்துணரும் நேற்று செய்தது நம்மை அச்சப்பட வைத்திருக்கிறது. இவர் ஆண்களை கண்டு அஞ்சுகிறார் என்பது ஒருபுறம், அதனால் பொதுநலக் கேடு ஒன்றும் இல்லை. அது அவர் இயல்பு நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அத்தனை குற்றங்கள் செய்த ஆண்களை விசாரிக்காமல் ஏற்கனவே அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்ணை இவரும் சேர்ந்து குற்றப்படுத்தியது தவறு.
போட்டியாளர்களும் உங்களையும் என்னையும் போல மனிதர் தானே அவரவர்க்கு பேசும், சிந்திக்கும், செயல்படும் விதம் இருப்பது இயற்கைதானே. அதை கிண்டலடிப்பதும் கடுமை காட்டுவதும் இவர் நினைப்பதையே அவர்கள் சொல்ல வேண்டும், அதை இவர் விரும்பும் வண்ணமே சொல்ல வேண்டும் என்பதும், சொல்லாவிட்டால் சினமடைவதும் சலித்துக் கொள்வதும் எதிரில் நிற்பவரை பொதுவெளியில் கேவலப்படுத்துவதும் வேண்டா வெறுப்போடு அவர்களிடம் உரையாடுவதும் ஒரு தொகுப்பாளருக்கு அழகா, பணத்துக்காக நிகழ்ச்சி நடத்த வருபவர் குறைந்தபட்ச பொறுப்போடு கண்ணியத்தோடு ஈடுபாட்டோடு நடத்த வேண்டும் என்று விஜய் சேதுபதியை கடுமையாக ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்துள்ளார்.





