நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ரஜினிக்கு பிறகு ஊடகங்களால் அதிகளவில் கவனம் பெறும் ஒரு நட்சத்திரமாக இருப்பவர் இப்போது நடிகர் விஜய்தான். அவர் நடத்திய தவெக கட்சி மாநாட்டுக்கு போலீசார் அனுமதித்தது 50 ஆயிரம் பேர் மட்டும்தான். ஆனால் பல லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு வந்து விஜயின் மக்கள் செல்வாக்கை நிரூபித்து காட்டி விட்டனர்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நடத்தும் அரசியல் மாநாடு, பொதுக்கூட்டங்கள் என்றால் வாகனம் வைத்து ஆட்களை திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு ரூ. 200 சம்பளம், சிக்கன் பிரியாணி வாங்கித் தர வேண்டும். சில நேரங்களில் குடிமகன்களுக்கு அவர்கள் விரும்பும் அதையும் வாங்கி தரவேண்டிய நிலைக்கு அரசியல் கட்சிகள் நிர்பந்திக்கப்படுகின்றன.
ஆனால் விஜய் நடத்திய அரசியல் மாநாட்டுக்கு தமிழ் நாடு முழுவதும் இருந்து மக்கள் அவர்களாகவே திரண்டு வந்தனர். மாநாட்டில் காணப்பட்டது எல்லாம் தானாக சேர்ந்த கூட்டமாக இருந்தது. இதுதான் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் மீது மக்கள் கொண்ட பேரன்பு மட்டுமின்றி திராவிட கட்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவும் இது இருந்தது.
இப்போது தளபதி 69 என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், நரேன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது.
இதற்கு முன்பு வெளியான தி கோட் படத்துக்கு நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. தற்போது இந்த 69வது படத்துக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெற்றி என்ற படத்தில்தான் விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய விஜயின் அப்பா, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, விஜய் முதல் முதலில் 1984ம் ஆண்டில் வெளிவந்த வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். விஜயகாந்த் நடித்த இந்த படத்தை இயக்கியது நான்தான். இந்த படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது, என்று கூறியிருக்கிறார்.





