இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கன்னட படம் காந்தாரா. இந்த படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்கி நடித்திருந்தார். தெய்வ பக்தி, நில உரிமை பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஆரம்ப கட்டத்தில் சாதாரண மனிதராக, கலாட்டா பேர்வழியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் கதாநாயகன், ஒரு கட்டத்தில் தெய்வ சக்தி புகுந்து மக்களை அழிக்க துடிக்கும் வில்லனிடம் இருந்து தனது கிராம மக்களை காப்பாற்றுவதுதான் கதை. அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகள் யாராலும் எதிர்பார்க்க முடியாத வேற லெவலில் இருந்தது.
இந்த படத்தில் நடித்ததற்காக ரிஷப் ஷெட்டிக்கு, சிறந்த நடிகர் விருதை கடந்த வாரத்தில் மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விருது காந்தாரா படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பொதுவானது என்று ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது காந்தாரா 2 படத்திற்கான படப்பிடிப்பு துரிதமாக நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலம் குந்தாபுரம் என்ற கடற்கரை பகுதியில் பசுமை நிறைந்த ஒரு பகுதியில் காந்தாரா ஷூட்டிங் நடத்தப்படுகிறது. இதற்காக 200 கார்பெண்டர்கள் மிக பிரமாண்டமான ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரமாண்ட ஷெட் அமைக்கும் பணியில் 200 பேர் ஈடுபட்டுள்ளதால், படத்தின் பல முக்கிய காட்சிகள் இங்கு எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பான் இந்தியா படமாக உருவாகும் காந்தாரா 2 படத்தை வருகிற 2025ம் ஆண்டு ஏப்ரல் மே கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
காந்தாரா 2 படம் ரிலீஸாக இன்னும் எட்டு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருந்தாலும், வருகிற நவம்பர் டிசம்பர் மாதங்களில் படத்தின் பிரமோவை ஆரம்பித்துவிட ரிஷப் ஷெட்டி முடிவு செய்திருக்கிறார். அதனால் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் இருந்தே படத்தின் போஸ்டர்கள், சிங்கிள்கள், டிரெய்லர் என அடுத்தடுத்த பிரமோ வெளியாகும் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.





