தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். துவக்கத்தில் நடனக் கலைஞராக சில படங்களில் நடித்தவர், பிறகு சண்டை காட்சிகளில் பல படங்களில் நடித்தார். கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தன கடத்தில் வீரப்பனை அடையாளப்படுத்தும் விதமாக, வீரபத்ரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகானை நடிக்க வைத்து நடிகர் விஜயகாந்த் வாய்ப்பளித்தார்.
கேப்டன் பிரபாகரன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், மன்சூர் அலிகானின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் ஒரு கட்டத்துக்கு பிறகு காமெடி நடிப்பிலும் அசத்தினார். சமீபமாக குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் அவர் நடித்த சில படங்களை அவரே டைரக்ட் செய்திருக்கிறார். அவரே தயாரித்தும் இருக்கிறார். ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்ற மிக நீளமான பெயர் கொண்ட தமிழ் படத்தில் நடித்தவர் மன்சூர் அலிகான்.
இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை துவங்கிய நடிகர் மன்சூர் அலிகான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் இறுதி பிரசார நாளில் ஜூஸ் குடித்து மயங்கி விழுந்த அவர், தனக்கு கொடுக்கப்பட்ட ஜூஸில் யாரோ விஷம் கலந்து கொடுத்துவிட்டதாக புகார் கூறியும் பரபரப்பை ஏற்படுத்தினார். லியோ படம் வெளியான போது, திரிஷா குறித்து பேசி சர்ச்சையிலும் சிக்கி பிறகு மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துலக் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருள் ஒழிப்பில் சென்னையில் போலீசார் தீவிரம் காட்டி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் முகப்பேறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட மாணவர்களின் மொபைல் எண்களில், விசாரணையில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துலக் நம்பரும் சிக்கியுள்ளது. இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து அலிகான் துலக்கை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை ஜே ஜே நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.





