மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சுகுமாறன் இயக்கத்தில் புஷ்பா 2 படம், இன்று உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புஷ்பா படம் போலவே, புஷ்பா 2 படத்திலும் அல்லு அர்ஜூன் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். தரமான சம்பவமாக படம் இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா படம் அபரிதமிதமான வெற்றியை பெற்றதை தொடர்ந்து, இந்த 2ம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 12 ஆயிரம் தியேட்டர்களில் புஷ்பா 2 ரிலீஸாகி உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் 800 தியேட்டர்களில் புஷ்பா 2 வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நேற்று, ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் புஷ்பா 2 படம் பிரிமியர் ஷோ நடந்தது. இதில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனும் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அப்போது தியேட்டரில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழலில் அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய 39 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் மற்றும் தனது 2 பிள்ளைகளுடன் அவர் படம் பார்க்க வந்த நிலையில், கூட்ட நெரிசலில் நசுங்கி அவர் உயிரிழந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரது குழந்தையும் இப்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்து வருகிறது.
இந்த சம்பவம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்துக்கு உதவி செய்வோம் என்று தானாக முன்வந்து அறிவித்துள்ளது.
இதுகுறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேற்று இரவு புஷ்பா 2 படம் திரையிட்டபோது நடந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அந்த குடும்பம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறு குழந்தையுடன் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.





