விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. 7 ஆண்டுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது 8வது ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இம்மாதம் 6ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது முதல் இறுதி நாட்களை எட்டிய நிலையில் இன்றும் நாளையும் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, இந்த வாரம் நடத்தப்பட்ட போட்டிகள், பிரச்னைகள், போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் குறித்து பேச இருக்கிறார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்களை விட இந்த முறை போட்டியாளர்கள் பலத்த ஏமாற்றத்தை தருவதாக பார்வையாளர்கள் மத்தியில் முதல் விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழில் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழில் விஜய் சேதுபதி நடத்துவது போல், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா, கன்னடத்தில் நடிகர் சுதீப், அதேபோல் இந்தியில் நடிகர் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்தியில் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிவரும் இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 2006ம் ஆண்டு முதல் இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்துவருகிறது. இந்தியில் தற்போது இது 18வது சீசன் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி நடிகர்கள், சமூக வலைதள பிரபலங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியில் நடந்து வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதராஜ் என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு கழுதையை ஹவுஸ் மேட்டுகள் பராமரிக்க வேண்டும் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. மேலும் காதராஜ் கழுதைக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் தனியாக ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த பிரமோ வெளியான நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் சல்மான் கான் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு பிராணிகள் நல அமைப்பான பீட்டா (இந்தியா), கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், பிக்பாஸ் வீட்டுக்குள் கழுதையை வைத்திருப்பதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. உடனடியாக அந்த கழுதையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கழுதையை பயன்படுத்துவது ஒன்றும் நகைப்புக்குரிய விஷயமல்ல. இயற்கையாகவே கழுதைகள் அதிகம் பதற்றப்படும் குணமுடையவை. அதிலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வரும் சத்தம், லைட்டிங் இதையெல்லாம் சேர்ந்து இன்னும் அதை பயமுறுத்தும். அதுவும் குறிப்பாக சிறிய இடத்தில் வைக்கப்பட்ட கழுதை குறித்து பொதுமக்கள் பலம் கவலை தெரிவித்துள்ளனர். என்று அந்த கடிதத்தில் பீட்டா கூறியுள்ளது.





