தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் நிறைய படங்களில் நடித்தவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் கதாநாயகியாக வலம் வருகிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார்.
தற்போது அவர் விடாமுயற்சி, குட் பேக் அக்லி படங்களில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45 படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
அத்துடன் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்துள்ள தக்லைப் படம், வரும் ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பது திரிஷாதான் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது.
தமிழில் நடிகர் விஜயுடன் திரிஷா அதிக படங்களில் நடித்துள்ளார். கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி, லியோ உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தி கோட் படத்தில் மட்ட என்ற ஐட்டம் பாட்டுக்கு விஜயுடன் சேர்ந்து முதன் முறையாக குத்தாட்டமும் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமண விழாவுக்கு நடிகர் விஜய், நடிகை திரிஷா உள்ளிட்ட 6 பேர் தனி விமானத்தில் கோவா சென்றுள்ளனர். பின்பு அங்கிருந்து காரில் திருமண விழாவுக்கு சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. விஜயுடன் திரிஷா நெருங்கிய நட்பு கொண்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதுவும், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தலைவராக உள்ள விஜய், திரிஷாவுடன் நட்பு கொண்டிருப்பது, விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் நடிகை திரிஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 22 ஆண்டுகளாக சினிமா என்ற இந்த மாயாஜாலத்தில் அங்கம் வகிக்கும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் ரசிகர்கள்தான். அவர்களால்தான் இது நடந்தது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.





