விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. 10 வாரங்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த 6 சீசன்களை விட இந்தமுறை துவக்கத்தில் இருந்தே சர்ச்சைகளுக்கும், பிரச்னைகளுக்கும், சண்டைகளுக்கும் சிறிதும் பிக்பாஸ் வீட்டுக்குள் பஞ்சமில்லை. அதுவும் பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் ஸ்மால் ஹவுஸ் என இந்த முறை மாற்றப்பட்டுள்ளது.
இந்தமுறை பிக்பாஸ் போட்டியாளர்களில் பங்கேற்றவர்களில் கூல் சுரேஷ், விசித்ரா, அர்ச்சனா, மாயா, கானா பாலா, பவா செல்லத்துரை, யுகேந்திரன், ரக்சிதா கணவர் தினேஷ் போன்ற ஒரு சிலர் மட்டுமே, மக்கள் மத்தியில் சற்று பிரபலமானவர்கள். பரிச்சயமான முகங்கள். மற்றவர்கள் எல்லாம் பெரிய அளவில், பார்வையாளர்களுக்கு தெரியாதவர்கள். பலரும் புதிய முகங்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரை துவக்கத்தில், வீட்டுக்குள் நடத்தப்படும் டாஸ்க்குளை போட்டியாளர்கள் எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கின்றனர் என்பதுதான் முக்கியமாக கவனிக்கப்படும். நிகழ்ச்சியை பார்க்க அடுத்தடுத்து விறுவிறுப்பாக்கும். ஆனால் இப்போது வீட்டுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகள், சர்ச்சைகள் தான் பெரிய அளவில் இருக்கின்றன. டாஸ்க் என்பது அந்த வார தலைவருக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் டைட்டில் வின்னர்களாக ஆரவ், ரித்விகா, முகின், ஆரி, ராஜூ, அஸீம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ரித்விகா ஒருவர் மட்டுமே பெண் போட்டியாளர். மற்ற 5 பேரும் ஆண் வெற்றியாளர்கள். இதில் கவிஞர் சிநேகன், நடிகை ஐஸ்வர்யா, விக்ரமன், பிரியங்கா, தர்ஷன், ஷிவின், போன்றவர்கள் இறுதி போட்டியில் கடைசி இருவராக வந்து, கடைசி நொடியில் வெற்றி வாய்ப்பை இழந்து ரன்னர் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த முறை பிக்பாஸ் டைட்டில் வின்னர் பெண் போட்டியாளருக்கு தான் என பிக்பாஸ் மற்றும் கமல், இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனங்கள் என கலந்து பேசி முடிவு செய்துவிட்டன. அந்த வகையில் இந்தமுறை பிக்பாஸ் 7 சீசன் வின்னர் நடிகை விசித்ரா தான் என்று கூறப்படுகிறது.
இதுவரை பிக்பாஸ் வின்னர்களாக ஜெயித்த அனைவருமே, 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், இந்தமுறை 50 வயதை நெருங்கும் விசித்ராவுக்கு கொடுக்க வேண்டும் என முடிவாகியுள்ளது. மேலும், அவர் மீது பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாகவே, 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஓட்டல் ரூமுக்கு நைட் அழைத்த விவகாரத்தையும் பேச வைத்தது விஜய் டிவி என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.





