கடந்த 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 74வது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து, சிக்குடு ஒரு நிமிட பாடல் காட்சி வெளியானது. ரசிகர்கள் ரஜினியின் நடனத்தை பார்த்து வைப் ஆகினர்.
அதே நாளில், கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு, வீடியோ காட்சியாக வெளியாகும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில், அப்படி எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
இதற்கு முக்கிய காரணம், தொர்மழை காரணமாக, ஜெயிலர் 2 படம் அறிவிப்பு வீடியோவுக்கான படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. அதுமட்டுமின்றி கூலி அப்டேட், ஜெயிலர் 2 அப்டேட் இரண்டும் ஒரே நாளில் வெளியானால், அதையும் இதையும் ஒப்பீடு செய்து, அதிலும் ஒரு சர்ச்சையை கிளப்பி விடுவர் என்பதாலும் ஜெயிலர் 2 அறிவிப்பை படக்குழு தவிர்த்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.
இதற்கிடையே ஜெயிலர் 2 படம் குறித்த ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்துக்கு இசையமைத்த அனிருத் தான் ஜெயிலர் 2 படத்துக்கும் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு அனிருத் இசையும் மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்தளவுக்கு பாடல்களிலும், பின்னணி இசையிலும் அனிருத் அதகளம் செய்திருந்தார்.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்துக்கு இசையமைக்க அனிருத், ரூ. 17 கோடி சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு ஜெயிலர் 2 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஜெயிலர் படத்துக்கு சில கோடிகள் மட்டுமே சம்பளம் வாங்கிய அனிருத், இப்படி பல கோடி ரூபாய் கூடுதல் சம்பளம் கேட்பதால் அதிர்ந்து போயுள்ளது.
ஆனால் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் வாங்கிய சம்பளம் ரூ. 14 கோடி என்பதால், ஜெயிலர் 2 படத்துக்கு ரூ. 17 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்கு அனிருத் இசைதான் காரணம் என்பதால், தாராளமாக அந்த சம்பளத்தை சன் பிக்சர்ஸ் தர முன்வரலாம் என்ற ஒரு கருத்து இருந்தாலும், இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பரிசீலித்துதான் முடிவு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.





