விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் மருமகள் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான டிமாண்டி காலனி 2 படத்திலும் அருள்நிதிக்கு தங்கையாக நடிகை அர்ச்சனா நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனவர்.
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக டாக்டர் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அருண் பிரசாத். அவர் இப்போது விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்று வீட்டுக்குள் இருக்கிறார். அவரது காதலியான அர்ச்சனா, அவ்வப்போது அருண் பிரசாத்துக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த வாரம் அருண் பிரசாத் குறித்து மீதான புகார்கள் குறித்து விஜய் சேதுபதி அவரிடம் பல கேள்விகள் கேட்டு விமர்சித்து பேசியிருந்தார். அதுகுறித்து அருண் பிரசாத்தின் காதலியான நடிகை அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை அர்ச்சனா அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது, ஒரு வீடு என்றால் எல்லோரும் சமம்தான். கிச்சனுக்கு, வீட்டு வேலைக்கு என ஆட்களை 2 தரப்பாக பிரிக்கும் ஒரு வேலை பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தது. ஆட்கள் குறைந்து விட்டதால் சமையல் வேலைக்கு ஆட்களை குறைக்கலாம் என்று அருண் சொன்னார்.
மற்ற வேலைகளை செய்ய ஆட்கள் வேண்டும் என்பதால், அந்த லாஜிக்கில் தான் அவர் அப்படி ஒரு கருத்தைச் சொன்னார். லேபர் வேலை, ஸ்கில் வேலை என பிரித்து பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் எல்லோரும் சமம் தான். கேம் விளையாடுவதுதான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது வேலை செய்வது அல்ல என்றும் அருண் தெளிவாகக் கூறினார். ஆனால் லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் பேசியதை எல்லோரும் விட்டு விட்டார்கள். ஆனால் அருண் எப்படி நினைக்கிறார் என்பதை மட்டும் ஊதி பெரிதாக்கி விட்டார்கள்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் இதையே செய்தார். அருண் பயந்துவிட்டார் அவரால் தனது தரப்பு வாதத்தை சரியாக எடுத்து வைக்க முடியவில்லை. இதை ஏன் இவ்வளவு பெரிதாக்கினார்கள் என புரியவில்லை. ஷோ முடிந்த பிறகு மைக்கில் பேசியது கன்ப்யூஷன் ரூமில் பேசியது எல்லாமே டேமேஜ் கண்ட்ரோல் மாதிரி தெரிந்தது. அதற்கு பேசாமலேயே விட்டிருக்கலாமே. இதை ஏன் 40 நிமிஷம் பேசிட்டு இருந்தீங்க என விஜய் சேதுபதியை கேள்வி கேட்டு தாக்கி பேசியிருக்கிறார். அர்ச்சனா பேசிய அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.





