சென்னையில் 2 தினங்களுக்கு முன், தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலாவுக்கு பாராட்டு விழா மற்றும் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், அருண்விஜய், சிவக்குமார் உள்பட இயக்குனர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.
இந்த விழாவில் இயக்குனர் பாலா பேசியதாவது, பல ஆண்டுகளுக்கு முன் பாண்டி பஜாரில் இருந்து ஒரு திரைப்பட விழாவுக்கு அழைத்துப் போகுமாறு சூர்யாவிடம் கேட்டேன். அப்போதுதான் நான் அவரை முதல்முறையாக பார்த்தேன். அப்போதே எனது அடுத்த படத்துக்கு சூர்யா தான் ஹீரோ என்பதை நான் மனதில் முடிவு செய்து விட்டேன்.
ஆனாலும் உடனடியாக அதை அவரிடம் நான் சொல்லவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அந்த விஷயத்தை சூர்யாவிடம் சொன்னேன். சூர்யாவுடன் பணியாற்றும் போது ஒரு நடிகரோடு பணியாற்றுவது போல இருக்காது. எனது தம்பியுடன் பணி செய்வது போல் தான் இருக்கும்.
என்னிடம் எப்போதுமே சூர்யா வெளிப்படையாகத்தான் இருப்பார். எனது இயக்கத்தில் அவர் அவர் நடிக்காத படங்கள் குறித்து கூட என்னிடம் வெளிப்படையாக பேசுவார். நன்றாக இல்லை என்றால், அண்ணா இந்த படம் நீங்கள் எடுத்தது போல் இல்லை என்று சொல்வார். நான் அதிகம் புகை பிடித்தவன். ஆனால் சூர்யா இருக்கும்போது அதை நான் செய்ய மாட்டேன். ஏனெனில் சிகரெட் பிடிக்கும்போது மற்றவர்கள் அட்வைஸ் செய்வார்கள். சூர்யா மட்டும்தான் என்னை நினைத்து வருத்தப்படுவார்.
ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது. தம்பியாக இருந்தால் மட்டும்தான் அந்த வருத்தம் வரும். அவன் இவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்தார். அப்போது அவருக்கு தெரியாமல் பெரிய மானிட்டருக்கு பின்பு மறைந்து நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். நடித்துக் கொண்டிருந்த போது சூர்யா, அதையும் கவனித்து இருக்கிறார்.
அந்த காட்சியை நடித்து முடித்துவிட்டு வந்தவரிடம், சிகரெட் பிடிப்பதை நான் குறைத்துக் கொண்டேன் என்று சொன்னேன். உடனே அவர் இல்லை அண்ணா, நீங்கள் எட்டு முறை சிகரெட் பிடித்தீர்கள் என்று சரியாக சொல்லி விட்டார். நான் என்ன செய்தாலும் அவர் என்னையே கவனித்துக் கொண்டு இருப்பார் என்று பாலா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.





