தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜீத்குமார். இப்போது அவரது நடிப்பில் விடாமுயற்சி, குட்பேட் அக்லி ஆகிய 2 படங்கள் தயாராகி உள்ளன. வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி படமும், அடுத்து மே 1ம் தேதி உழைப்பாளர் தினம், ஏகே பிறந்த நாளில் குட்பேட் அக்லி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.
கடந்தாண்டில் பொங்கலுக்கு வெளியான படம் துணிவு. அஜீத்குமார் நடித்த இந்த படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் ஆன நிலையில் வருகிற ஜனவரியில் விடாமுயற்சி படமும், மே மாதம் குட்பேட் அக்லி படமும் ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜனவரி முதல் துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜீத்குமார், தொடர்ந்து 10 மாதங்கள் 10 நாடுகளில் நடிக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்கிறார். கேப்டன் அஜீத்குமார் தலைமையில், அவரது அணி வீரர்களும் இந்த கார் பந்தயத்தில் கலந்துக்கொள்கின்றனர். வரும் அக்டோபர் மாதம் வரை இந்த கார் பந்தயம் நடக்கிறது.
அதனால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம்தான், கார் பந்தயத்தில் இருந்து அஜீத்குமார் முழுமையாக வெளியே வரப்போகிறார். அதன்பிறகு நவம்பர், டிசம்பர் 2 மாதங்கள் ஓய்வுக்கு பிறகுதான் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க வாய்ப்புள்ளது. ஆனால் இப்போதே அஜீத்குமார் நடிக்கப் போகும் அடுத்த படம் என்ன, இயக்குனர் யார் என்ற பஞ்சாயத்து சூடு பறக்கிறது. இயக்குனர்கள் சிறுத்தை சிவா, வெங்கட்பிரபு பெயர்கள் லிஸ்ட்டில் முதலில் இருக்கின்றன.
அஜீத்குமார் நடித்த வீரம், விஸ்வாசம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இதில் 2 படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தாலும் அப்பா மகள், அண்ணன் தங்கை பாசக் கதைகளாக சிறுத்தை சிவா இயக்கியிருந்தது, அஜீத்குமார் ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது. தற்போது சூர்யா நடிப்பில் பலத்த விமர்சனத்தில் சிக்கிய கங்குவா படத்தை தந்த சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று ஏகே ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் விஜய் நடித்த தி கோட் படத்தை இயக்கிய வெங்கட்பிரபுவும் அடுத்த படத்தை இயக்க ஏகேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் ஏற்கனவே மங்காத்தா என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தவர். இது அஜீத்குமாரின் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் சிறுத்தை சிவா, வெங்கட்பிரபு யாருக்கு வாய்ப்பு என்பதில் இப்போதே பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





