இன்னும் 2 தினங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் கிறிஸ்தவ மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சுற்றுலா தளங்களுக்கு சென்று அந்நாளை கொண்டாடவும் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார், தனது மனைவி ஷாலினி மற்றும் பிள்ளைகளுடன் கிறிஸ்தவ பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் அவர் இப்போது விடாமுயற்சி படத்தின் பாடல் படப்பிடிப்பில், படு பிஸியாக இருக்கிறார். அதனால் இந்த முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் பண்டிகை கொண்டாட வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் ஜனவரி முதல் வாரத்தில் அவர் துபாயில் நடக்க உள்ள கார் பந்த போட்டியில் பங்கேற்க செல்கிறார். தொடர்ந்து 10 மாதங்களுக்கு 10 நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க உள்ளார். அஜீத் கார் ரேஸிங் என்ற அணிக்கு அவர் தலைவராக இருப்பதால், அவரது அணியின் கீழ் 5 வீரர்கள் கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளனர்.
அதனால் ஜனவரி முதல் வாரத்தில் துபாய் செல்லும் நடிகர் அஜீத்குமார் அங்கு தனது மனைவி ஷாலினி, பிள்ளைகள் மற்றும் அங்குள்ள தனது அணியை சேர்ந்த கார் பந்தய அணி வீரர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் அதை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டமாகவும் இரட்டை விழாவாக கொண்டாட இருக்கிறார்.
இந்த சூழலில் நடிகர் விஜய், கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இதுவரை நடிகராக இருந்த அவர் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது குறித்த எந்த அறிவிப்பும், தகவலும், புகைப்படங்களும் வெளியானது இல்லை.
ஆனால் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள அவர், அந்த கிறிஸ்துமஸ் நாளில் ஏதேனும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, மக்களை சந்திப்பாரா அல்லது கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டுமொத்தமாக தவிர்த்து விடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் நலத்திட்ட உதவி வழங்கினாலும் அதை பனையூரில் வழங்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கிடாதீங்க என தளபதி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





