தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியவை. விமர்சன ரீதியாக தோல்வியான படங்கள் கூட வசூலில் சக்கைப் போடு போட்ட படங்களாக விஜய்க்கு இருந்திருக்கின்றன.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடித்த படங்கள் என்றாலே வசூலில் சக்கை போடு போடும் என்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. அந்த வகையில் மாஸ்டர் வாரிசு லியோ தி கோட் போன்ற படங்கள் பல நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியது என்றால் அது மிகையல்ல.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் தொடர்ந்து 3 படங்களில் நடித்தார். பிகில் தெறி மெர்சல் என்ற அந்த 3 படங்களுமே விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. இதில் விஜய் சமந்தா எமி ஜாக்சன் ராதிகா மொட்டை ராஜேந்திரன் மீனாவின் மகள் நைனிகா இயக்குனர் மகேந்திரன், பிரபு காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த படம் தெறி. இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான தெறி திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது. மேலும் தெறி படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 39 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த படத்தை இந்தி ரீமேக் படமாக பேபி ஜான் என்ற டைட்டிலில் இயக்குனர் அட்லி தயாரித்திருந்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான நேற்று பேபி ஜான் படம் வெளியானது. வருண் தவான் கீர்த்தி சுரேஷ் வாமிகா கபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் காளிஸ் இயக்கி இருந்தார். பேபி ஜான் வெளியான முதல் நாளில் நேற்று உலகம் முழுவதும் இந்த படம் மொத்தம் 12.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் பேபி ஜான் இந்தி படம் வசூல் ரீதியாக விஜய் நடித்த தெறி படத்தை விட மிகப்பெரிய அளவில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. தெறி படம் அளவுக்கு பேபி ஜான் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பது இந்தப் படத்தை தயாரித்த இயக்குனர் அட்லிக்கும் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், வருண் தவான் போன்றவர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.





