தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அவற்றில் 96 திரைப்படத்திற்கு என தனி ஒரு இடம் இருக்கும். இப்போது வரை அந்த திரைப்படத்தை கொண்டாடாத ரசிகர்களே இருக்க முடியாது. கைவிட்டுப் போன காதலை, எந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக அளிக்க முடியுமோ அதனை நிறைவாக செய்திருப்பார் இயக்குனர் பிரேம்குமார்.
நம்மில் பலருக்கும் பள்ளிப் பருவ காதல் என்பது இருந்திருக்கும். பசுமை நினைவுகளாக அதை மனதில் சுமந்து கொண்டிருக்க, முதன்முதலாக அதை திரையில் காட்டியவர் பிரேம்குமார். 15, 20 வருடங்களுக்கு முன்பு நாம் கொண்ட காதல் அப்படியே மனதில் விதையாய் இருந்து கொண்டிருக்க, அதற்கு தண்ணீர் ஊற்றி அழகு பார்த்தார் இயக்குனர்.
அதிலும் தனது காதலியை நினைத்தே வாழும் ஒரு ஆண் நபரின், வலியையும் சோகத்தையும் எந்த ஒரு இடத்திலும் அழுத்தம் குறையாமல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அவர் பதிவு செய்தார். அது மட்டுமல்ல, கடந்து போன காதலியை நாம் ஒரு நாள் பார்க்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் காட்சிகள் மூலம் பிரேம்குமார் விரிவுபடுத்தி இருந்தார்.
இயக்குனரின் இந்த எண்ண ஓட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் தான். இருவரும் போட்டி போட்டு நடித்து 96 திரைப்படத்திற்கு உயிர் ஊட்டினார்கள். குறிப்பாக, கோவிந்த் வசந்தாவின் இசையும் 96 திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்தது.
இப்படி அந்தக் காதல் காவியத்தை பற்றி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த படத்தை இயக்கிய பிரேம்குமார் அடுத்ததாக கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார். உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் திரைப்படமாக இது அமைந்தது. படத்தைப் பார்த்த பெரும்பாலானோர் மெய்யழகனை வாழ்த்தினார்.
இப்படியான சூழலில் 96 படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க இருக்கிறார் பிரேம்குமார். இது 96 திரைப்படத்தின் முந்தைய பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வேல்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க இருப்பதாகவும், சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளில் இதன் சூட்டிங் நடைபெறும் என்றும் சொல்கிறார்கள். இந்த தகவலால் 96 திரைப்படத்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





