தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகர் சூரி. பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் மூலம் கதாநாயகனாக மாறினார். பிறகு கருடன் கொட்டுக்காளி ஆகிய படங்களில் நாயகனாக நடித்த சூரி இப்போது மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சூரிக்கு அவரது சொந்த ஊரான மதுரையில் உணவகங்கள் உள்ளன. சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான உணவகங்கள் தெப்பக்குளம் ஊமச்சிகுளம் ரிசர்வ் லைன் திருநகர் மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களில் அந்த உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகம் மீது வக்கீல் முத்துக்குமார், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் சூரியின் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை ஒப்பந்தம் மூலம் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி இந்த உணவகம் துவங்கப்பட்டது.
பொதுப்பணித்துறை, இந்த உணவகம் செயல்பட 434 சதுரடி பரப்பளவு மட்டுமே அனுமதி வழங்கியது. ஆனால் உணவகம் அருகில் உள்ள செவிலியர் விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி அமைந்திருக்கும் இடத்தில் 350 சதுர அடிக்கு நிரந்தரமாக செட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கழிவுநீர் தேங்கும் செப்டிக் டேங்குகளின் மேற்பரப்பில் அமர்ந்து காய்கறிகள் வெட்டுதல் உணவு சமைத்தல், உணவுப் பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகளை இரவு பகலாக செய்கிறார்கள்.
மேலும் அந்தப் பகுதியில் அதிகளவில் தொற்றுநோய் உண்டாகும் பெருச்சாளிகள், கரப்பான்கள் காணப்படுகின்றன. செவிலியர் விடுதிக்கு காற்றோட்டம், சூரிய ஒளி வரும் விதமான அமைக்கப்பட்ட ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து இந்த உணவகத்தினர் மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டைப் பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர். செவிலியர்கள் ஜன்னலை கூட திறக்க முடியாமல் மூடியே வைத்துள்ளனர். கழிவுநீர் தொட்டிகளின் நடுவில், பெருச்சாளிகள் கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லா முறையில் தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளை தினமும் ஏராளமான குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் பலரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணி துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதார முறையிலும் தரமற்ற வகையிலும் உணவுகளை தயாரித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் உணவகத்தில் ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இதற்கு நடிகர் சூரியின் உணவகம் சார்பில், இந்த புகார் மனு காழ்ப்புணர்ச்சி, தனிநபர் தூண்டுதலால் தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.





