தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜீத்குமார். அவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருக்கிறார். அடுத்து மீண்டும் அவரே அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். வரும் நவம்பரில் ஏகே 64 படம் துவங்க இருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிறகு நடிகர் அஜீத்குமார், கடந்த ஜனவரி மாதம் முதல் கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் நடிப்பு, கார் பந்தயம் என இரண்டிலும் மாறி மாறி கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார். ஒரு ஆண்டுக்கு 6 மாதம் சினிமாவிலும் 6 மாதம் கார் ரேஸிலும் கலந்து கொள்வேன் என்று ஏற்கனவே அஜீத்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, முதல் முதலில் நான் சினிமாவில் நடிக்க வந்தபோது எனக்கு தமிழ் சரியாக பேச வரவில்லை. எனது உச்சரிப்பில் ஆங்கில மொழியின் சாயல் அதிகமாக இருந்தது. அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்த பிறகு எனது பலவீனங்களை சரி செய்ய பயிற்சி எடுத்தேன். அதை சரியும் செய்தேன்.
நான் இப்போது அடைந்திருக்கும் நிலைமை அனைவருக்கும் தெரியும். சினிமா போல தான் கார் ரேஸிலும் காயங்கள் உண்டாகும். ஆனால் பயிற்சி எடுப்பேன். விரைவாக கற்றுக் கொள்வேன். எனக்கு 54 வயதாகிறது. எனினும் என்னால் முடிந்தவரை கார் ரேஸை தொடர விரும்புகிறேன். கடவுளின் கருணையால் எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது.
பெரிய அளவில் காயங்கள் இன்றி உடன் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பால் சிறப்பாக இருக்கிறேன். கார் ரேஸிங்கில் அஜீத் குமார் கார் ரேசிங் நிறுவனத்தை ஈடு இணையற்ற ஒன்றாக மாற்றுவதே எனது விருப்பம். என்னை குறித்து மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை நானே மதிப்பிட்டுக் கொள்ள மாட்டேன்.
நான் வெற்றியாளனாக இருக்க விரும்புகிறேன். எனது கடைசி காலத்தில் நான் முயற்சித்தேன், நான் ஏதோ செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் அஜீத்குமார் கூறியிருக்கிறார். இதன்மூலம் கார் ரேஸிங் மூலம் தனது அணியை ஒரு முக்கிய இடத்துக்கு கொண்டு வரும் முடிவில் நடிகர் அஜீத்குமார் மிக தீவிரமாக இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.





