இறுதிச்சுற்று சூரரைப் போற்று போன்ற வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படம் புறநானூறு. 1960களில் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய கதைகளத்தில் இந்த படம் உருவாகிறது. கதை வசனத்தை மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதியிருக்கிறார்.
மதுரையில் நடந்த படப்பிடிப்பில் சில வாரங்கள் பங்கேற்ற நடிகர் சூர்யா, படத்தின் கதையில் மாற்றங்கள், திருத்தங்களை சொல்லி இயக்குனரை தொல்லை செய்ததால், சுதா கொங்கரா அந்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கும் திட்டத்தை கைவிட்டார்.
அதன்பிறகு சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படம் ரெட்ரோ படத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்திலும் சிவகார்த்திகேயன் பிஸியாக இருந்த நிலையில், அவரது 25வது படத்தை சுதா கொங்கரா இயக்க முடிவானது.
அமரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நாயகியாக தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள ஸ்ரீலீலா நடிக்கிறார். பரதேசி பட ஹீரோ அதர்வா, முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார்.
நடிகர் சூர்யா நடிக்க மறுத்து வெளியேறிய அதே கதையில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கல்லூரி மாணவராக மீசை தாடியின்றி இளைஞர் தோற்றத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு மாணவர்களின் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடிக்காமல் விட்டுச் சென்றதால் இந்த படத்தின் பெயர் புறநானூறு என வேண்டாம். வேறு டைட்டில் வைத்துக்கொள்ளலாம் என ஏற்கனவே படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா முடிவு செய்திருந்தார். இதுவரை சிவகார்த்திகேயன் 25 என அழைக்கப்பட்ட இந்த படத்துக்கு 1965 என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 2018 என்ற டைட்டில் வெளியான மலையாள படம் பெரிய வெற்றியை பெற்றது. அதனால் 1965 காலகட்டத்தை குறிக்கும் விதமாக, மலையாள பட டைட்டிலை பாலோ செய்து இந்த டைட்டிலை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.





