தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவராக தனுஷ் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரது 50வது படம் ராயன் தந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு அவரது நடிப்பில் குபேரா என்ற படம் விரைவில் வெளியாகிறது.
அடுத்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படமும், அதையடுத்து இட்லிக்கடை என்ற படமும் வெளியாக இருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிற இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2 பாகங்களாக உருவாக்க உள்ளார்.
இதற்கிடையே அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். தயாரிப்பாளர் மதுரை அன்பு தயாரிக்கும் இந்த படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படி அடுத்தடுத்த லைன் அப்புகளில் நடிகர் தனுஷ் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 2004ம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக்கொண்ட இந்த நட்சத்திர தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் தங்களது பிரிவை அறிவித்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரது விவாகரத்து வழக்கு, தற்போது சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நாளை தீர்ப்பு வெளியாகிறது.
கடந்த வாரத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த 3 முறை, இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகாத தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே இந்த முறை கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். அப்போது, இனிமேல் இருவருமே சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் நாளை தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களது முடிவின் அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கவே அதிக சாத்தியம் உள்ளது. இதன்பிறகு அவர்களது பிள்ளைகள் தந்தை அல்லது தாய் யார் வசம் இருப்பார்கள், தனுஷ் 2வது திருமணம் செய்துக்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.





