தமிழ் சினிமாவில் பல காமெடி கலைஞர்கள் நடித்திருந்தாலும் சில நடிகர்களின் நடிப்பு வெகு இயல்பாக இருக்கும். அவரது டயலாக் டெலிவரியும் யதார்த்தமான உடல் பாவனைகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடும். அவர்களில் ஒருவர்தான் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அதிக கவனம் பெற்றிருக்கிறார்.
இயக்குனர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சாகுடுக்கி என்ற பெயரில் 2 காட்சிகளில்தான் கஞ்சா கருப்பு தென்படுவார். அதிலும் துபாய் மலேசியான்னு வெளிநாட்ல கண்ட பயலுக முன்னாடி ஆடுவே, இங்க நம்ம சாதி சனத்து முன்னாடி ஆட மாட்டீயா என்று சிம்ரனிடம் அழுதபடி அவர் பேசிய காட்சிதான் அவரது முதல் அடையாளமாக இருந்தது.
அதன்பிறகு அமீர் இயக்கிய ராம் படத்தில் ஆளவந்தான், பருத்தி வீரன் படத்தில் டக்ளஸ் போன்ற கேரக்டர்களால் கஞ்சா கருப்பு காமெடி நடிகராக வரவேற்பை பெற்றார். சுப்ரமணியபுரம் நாடோடிகள் தாமிரபரணி அறை எண் 305ல் கடவுள் போன்ற படங்களால் கஞ்சா கருப்பு முன்னணி காமெடி நடிகராக பிரபலமானார்.
அதிலும் அறை எண் 305ல் கடவுள் படத்தில் நடிகர் சந்தானமும், கஞ்சா கருப்பு இருவரும் இரட்டை நாயகர்களாக நடித்திருந்தனர். அவர்களுடன் கடவுள் கேரக்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். சிம்புதேவன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை, கவனத்தை ரசிகர்களிடம் பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவி பிக்பாஸ் போட்டியாளராகவும் கஞ்சா கருப்பு கலந்துக்கொண்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கஞ்சா கருப்பு கூறியதாவது, நான் இயக்குனர் பாலா அண்ணா ஆபீஸ்ல, ஆபீஸ் பாயா வேலை செஞ்சேன். நீ இங்கேயே தங்கிக்க, சினிமால வளர்ந்ததுக்கு அப்புறம் என் பேர சொல்லு, வளர்றதுக்கு முன்னாடி சொல்ல கூடாதுன்னு அண்ணன் சொன்னார்.
எனக்கு வாழ்க்கை கொடுத்தது இரண்டு குருநாதா்கள். ஒன்னு பாலா அண்ணா, இன்னொன்னு அமீர் அண்ணா. இன்னைக்கு வரைக்கும் அவங்க ரெண்டு பேர் முன்னாடி நான் உட்கார்ந்து பேசுனது இல்ல. கைய கட்டிக்கிட்டு நின்னுதான் பேசுவேன் என்று அந்த நேர்காணலில் கஞ்சா கருப்பு கூறி இருக்கிறார். இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்த பிறகும் தனது குருநாதர்கள் மீது கஞ்சா கருப்பு வைத்துள்ள மரியாதையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





