பா ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு காக்கா முட்டை படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பிறகு தொடர்ந்து கனா, நம்ம வீட்டுப்பிள்ளை, திட்டம் இரண்டு, டாக்ஸி டிரைவர் ஜமுனா, பஹீரா, தர்மதுரை போன்ற பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கவர்ச்சியை நம்பாமல், தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் சில நடிகைகளின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருவராக இருக்கிறார். மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியை நம்பாமல் நல்ல கதை அம்சமுள்ள படங்களை தேர்வு செய்து அவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்க, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, கேரளாவில் எழுந்த நடிகைகள் பாலியல் விவகாரம், ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கை வெளியீட்டை தொடர்ந்து, இங்கு முழுமையான செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த பெண்கள் பாதுகாப்பு குழுவின் தலைவராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் நடிகைகள் குஷ்பு, சுகாசினி நடிகை லிசி போன்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் மனநல ஆலோசகர், சட்ட ஆலோசகர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், இந்த பாதுகாப்பு கமிட்டியில் புகார் செய்யலாம்.
இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், நான் திரையுலகில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். ஒரு நடிகையாக நான் கவனிக்க வேண்டிய முதல் பிரச்சனை, வெளிப்புற படப்பிடிப்புக்குச் செல்லும்போது சரியான கழிப்பறை வசதி மற்றும் எல்லா வசதிகளும் கொண்ட கேரவன் முன்னணி நடிகையான எனக்கு கிடைக்கிறது. ஆனால் குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடிக்கும் பெண்கள் கழிப்பறை வசதி, மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.
சினிமாவில் இது போன்ற முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். நான் திரையுலகில் பாலியல் பிரச்சனைகளை இதுவரை எதிர்கொண்டதில்லை. தமிழ் சினிமாவில் பாலியல் துன்பத்தை விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டடு இருப்பதை நான் வரவேற்கிறேன். பெண்கள் புகார் கொடுத்தால் அதனால் அவர்களுக்கு சினிமாவில் பாதிப்பு ஏற்பட்டக் கூடாது. அவர்களை பாதுகாக்க வேண்டும். யாராவது குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். திரை உலகில் உள்ள நடிகைகள் தைரியமாகவும் திறமையுடனும் இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.





