தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் தமிழில் பல மாஸ் ஹிட் படங்களை தந்திருக்கிறார். இப்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிகர்கள் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கேம் சேஞ்சர் படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்த படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்காக படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
வருகிற 7ம் தேதி சென்னையில் கேம் சேஞ்சர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப். இந்தியில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். விஜய் நடித்த லியோ, மகாராஜா படங்களிலும் நடித்திருந்தார். மலையாளத்தில் தற்போது வெளியான ரைபிள் கிளப் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ஷங்கர், கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல தான் எடுத்துள்ளேன். இன்றைய இளைஞர்களுக்கு இன்ஸ்டா கொடுக்கும் சுவாரசியத்துக்கு இணையாக கேம் சேஞ்சர் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார் இது குறித்து பேசிய பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் இயக்குனர் சங்கரின் பேச்சு குறித்து வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் அனுராக் காஷ்யப் கூறுகையில், ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குனர்கள் இப்படி பேசுவது வருத்தத்தை தருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல படத்தை எடுத்திருக்கிறேன் என்றால் ரசிகரின் தேவைக்காக இயக்குனர் தன்னை மாற்றிக் கொண்டதாகி விடும். நல்ல உணவை பரிமாறுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று அற்புதமாக சமைத்துக் கொடுப்பது, இரண்டு பரிமாறுபவராக மட்டும் இருந்து கேட்கும் உணவை மட்டுமே பரிமாறுவது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.





