நடப்பாண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை இதுவரை தமிழில் 250க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை, தமிழில் வெளியான எந்த படமும் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.
பொங்கல் பண்டிகையன்று வெளியான கேப்டன் மில்லர், அயலான், மேரி கிறிஸ்துமஸ், லால் சலாம், மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் மழையில் நனையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே நேரத்தில் மலையாளத்தில் இருந்து வெளியான பிரேமலு, பிரம்மயுகம், ஆடுஜீவிதம், ஆவேசம், மஞ்சும்மெல் பாய்ஸ் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டன. குறிப்பாக மஞ்சும்மெல் பாய்ஸ் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த நேரத்தில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் நடித்த கில்லி படம் ஓரளவுக்கு வசூலில் சாதித்து, தமிழ் படங்களின் மானத்தை காப்பாற்றியது.
அதன்பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம், பெரிய அளவில் வரவேற்கப்பட்டு ரூ. 100 கோடி வசூலை கடந்தது. விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா, தனுஷின் 50வது படம் ராயன் ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை எகிறி குதித்து உற்சாகப்படுத்தும் சிறந்த படங்களாக அமைந்தன.
இந்நிலையில் நடப்பாண்டில் 250க்கும் அதிகமான தமிழ் படங்கள் வெளியான நிலையில், அதிக வசூல் சாதனையில் முதல் 10 இடங்களை பிடித்த படங்கள் என்றால் அது முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் மட்டும்தான். அதிலும் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களின் எண்ணிக்கை 8 என்பது கவனிக்கத்தது.
இதில் விஜய் நடித்த தி கோட் 448 கோடி, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் 340 கோடி, ரஜினி நடித்த வேட்டையன் 265 கோடி, விஜய் சேதுபதி நடித்த மகாராஜா 178 கோடி, தனுஷ் இயக்கி நடித்த ராயன் 155 கோடி, கமல் நடித்த இந்தியன் 2 ரூ. 150 கோடி, சூர்யா நடித்த கங்குவா 120 கோடி, சுந்தர் சி நடித்த அரண்மனை 4 படம் 105 கோடி, சியான் விக்ரம் நடித்த தங்கலான் படம் 80 கோடி, அருள்நிதி நடித் டிமாண்டி காலனி 2 படம் 60 கோடி ரூபாய் என வசூலித்துள்ளது.





