தமிழ் சினிமாவில் திகில் திரில் படங்களுக்கு எப்போதுமே ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. மை டியர் லிஷா குட்டிச்சாத்தான் பேய் வீடு அதே கண்கள் வா அருகில் வா உருவம் என பல திகில் படங்கள் அந்த காலத்திலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கின்றன.
அந்த வகையில் இப்போதும் திகில் திரில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படம் இதுவரை 4 பாகங்களாக வந்து வெற்றி பெற்ற நிலையில், அரண்மனை 5 படத்துக்கான ஆரம்பகட்ட பணிகளில் சுந்தர் சி ஆர்வம் காட்டி வருகின்றார்.
அதே போல் நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தை தொடர்ந்து காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 படங்கள் பெரிய வெற்றிகளை பெற்ற நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் காஞ்சனா 4 படம் உருவாகி வருகிறது. இதில் நடிகை பூஜா ஹெக்டே பேய் கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரில் திகில் படம் டிமாண்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். அருள்நிதி நாயகனாக நடித்திருந்தார். பேய் கட்டுப்பாட்டில் இருக்கும் அறைக்குள் சிக்கிக் கொள்ளும் 4 நண்பர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான், திகில் காட்சிகள்தான் இந்த படத்தின் கதை.
டிமாண்டி காலனி படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், 9 ஆண்டுகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி டிமாண்டி காலனி 2 வெளியானது. அருள்நிதி பிரியா பவானி ஷங்கர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 3 படம் அடுத்து உருவாகிறது.
டிமாண்டி காலனி முதல் பாகத்தில் அறையில் திகில் சம்பவங்கள் நடந்தது. 2ம் பாகத்தில் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாகி இருந்தது. இப்போது வெளியான தகவலின்படி டிமாண்டி காலனி 3 படத்தில் சில வெளிநாடுகளில் கதை சம்பவங்கள் நடப்பது போல படம் உருவாகிறது. அதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இப்போதே எகிற துவங்கி விட்டது.





