இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1998ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். லஞ்சம் ஊழலுக்கு எதிரான ஒரு படமாகவும், இந்திய சுதந்திர போராட்டத்தை கண்முன் நிறுத்திய ஒரு படமாகவும் இது இருந்தது. கமல் படங்களில் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக இந்தியன் அமைந்தது.
தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், வரும் ஜூன் மாதம் 13ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு, சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்பட உள்ளது.
ஆனால் தற்போது இந்தியன் 2 படம் வெளியீடு இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் தவிர பிற மொழிகளுக்கான வெர்ஷன்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் இந்த படத்தை வரும் ஜூன் 13ம் தேதி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜூலை தவிர்த்து, ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடலாம் என படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இந்தியன் 2 படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே ஆகஸ்ட் 15 அன்று, அல்லு அர்ஜூன் நடிப்பில் பான் இந்தியா படமான புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் 2021ல் வெளியான புஷ்பா மிகப்பெரிய பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தை வெளியிட தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். அதனால் அதே நாளில் இந்தியன் 2 படத்துக்கு தேவையான தியேட்டர்கள் கிடைக்குமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாயகனாக கோலோச்சிக் கொண்டு இருக்கும் கமல்ஹாசனுக்கு, தெலுங்கு பட மாஸ் ஹீரோ அல்லு அர்ஜூன் இப்போது போட்டியாளராக நிற்கிறார். அவருக்கு ஆதரவாகதான் தியேட்டர்களும் ஒதுக்கீடு அதிகளவில் செய்யப்பட வாய்ப்புள்ளது. இது என்ன அலங்கோலம், தமிழ் நாயகனுக்கு இல்லாத முக்கியத்துவம் தெலுங்கு நாயகனுக்கு தருவதா என பலரும் இப்போதே விவாதிக்க துவங்கி விட்டனர்.





