நடிகர் ரஜினியில் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்திற்கு தேனிசைச் தென்றல் தேவா இசையமைத்திருந்தார். பாட்ஷா படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடலாக இடம்பெற்ற ‘நான் ஆட்டோக்காரன்’ பாடல் மிகப்பெரிய ஹிட்டான பாடலாகும்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆட்டோக்காரர்களின் பிடித்தமான பாடலாக இது அமைந்தது. இன்றளவும் கூட விஜயதசமி பூஜையின்போது, ஆட்டோக்களுக்கு பூஜை போடும்போது இந்த பாடலை ஒளிபரப்புவதுண்டு. அந்த அளவிற்கு இது ஆட்டோக்காரர்களின் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்நிலையில் பாட்ஷா படத்தின் பணிகளின்போது நடந்த சுவாரஸ்ய தகவலை இசையமைப்பாளர் தேவா பகிர்ந்துள்ளார். படத்தின் ரெக்கார்டிங் பணியின்போது, தேவாவின் ஸ்டூடியோவிற்கு வந்த ரஜினியை காண ஒரு ஆட்டோ டிரைவர் வெளியே மாலையுடன் காத்திருந்துள்ளார். பின்னர் ரஜினி வந்தபோது அவருக்கு மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்கிச் சென்றுள்ளார்.
இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த தேவா ரஜினியிடம், அந்த ஆட்டோக்காரர் யார்? உங்கள் ரசிகரா எனக் கேட்டபோது, ரஜினி தேவாவுக்கு ஷாக்கான பதிலை கொடுத்திருக்கிறார். அவர் என்னுடைய ரசிகர் இல்லை சார், அவர் கமலின் ரசிகர்.
நான் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சமயத்தில் அவர் நான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் இருந்ததார். அப்போது அவர் வாடகை ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நான் ‘முள்ளும் மலரும்’ படத்தில் நடித்து கிடைத்த சம்பளத்தில் அவருக்கு ஒரு ஆட்டோ வாங்கிக் கொடுத்தேன்.
நான் அன்று செய்த உதவிக்கு நன்றிக்கடான ஒவ்வொரு வருடமும் அவர் தன் பிறந்த நாள் அன்று, என்னை நேரில் வந்து சந்தித்து மாலை போட்டுவிட்டு செல்வார் என்று ரஜினி கூறியுள்ளார். இந்த தகவலை தேவா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.





