விக்ரம் திரைப்படத்தின் இறுதியில் வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் வந்து போய் இருப்பார் நடிகர் சூர்யா. அவர் நடித்த அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் பிறகு சூர்யா நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சூர்யா ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நாட்களை கங்குவா திரைப்படத்திற்காக மட்டுமே செலவழித்து இருக்கிறார் சூர்யா. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் உட்பட பத்து மொழிகளில் இந்த படம் உருவாகி இருக்கும் நிலையில் அதை பார்த்து பார்த்து எடுத்து இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. படத்தில் வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதில் பாபி தியோல் சூர்யாவுக்கு வில்லனாக நடித்துள்ளார். திஷா பதானி, ஜெகபதிபாபு, நட்டி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
முதலில் இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதால், போட்டியிலிருந்து பின்வாங்கியது கங்குவா திரைப்படம். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் அன்றைய தேதியில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்திருக்கும் பீனிக்ஸ் படம் வெளியாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் வருவார். தனது தந்தையின் சிந்துபாத் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
இப்படியான சூழலில் தான் அவர் பீனிக்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ஆக உருவாகி இருக்கும் இதனை சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். முதலில் இந்த திரைப்படம் நவம்பர் 30ஆம் தேதி தான் வெளியாவதாக இருந்தது. தற்போது முன்கூட்டியே அதாவது 14ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்திருப்பதால் அன்றைய தேதியில் கங்குவா பீனிக்ஸ் என இரண்டு படங்கள் வெளியாகின்றன.





