சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து முன்னணி நடிகராக நடிப்பு திறமையால் உயர்ந்தவர் விஜயகாந்த். மதுரையில் இருந்து தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் சென்னைக்கு வந்த விஜயகாந்த், பல சினிமா கம்பெனி வாசல் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டவர்தான். அவருக்காக நடிகர் குள்ளமணி கூட பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு, தன்னைப் போன்ற திறமையான நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பளித்து அவர்களையும் ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தி பெருமையும், பெருந்தன்மையும் கேப்டனுக்கே சேரும். அந்த வகையில் இன்றுள்ள பல நடிகர்கள் விஜயகாந்தால் முன்னுக்கு வந்தவர்கள்தான்.
குறிப்பாக நடிகர்கள் சரத்குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், பொன்னம்பலம் போன்றவர்களுக்கு அவர்களது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தனது படங்களில் நடிக்க அதிக வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். அதே போல் திரைப்பட கல்லூரி மாணவர்களின் படங்களில் நடிக்கவும், தயாரிக்கவும் செய்தார்.
கேப்டன் விஜயகாந்த் குறித்து ஒரு நேர்காணலில் நடிகர் பொன்னம்பலம் கூறியதாவது, விஜயகாந்த் நடித்த தவசி படத்தில் நான் வில்லனாக நடித்திருந்தேன். அந்த கேரக்டரில் முதலில் யாரை நடிக்க வைக்கலாம் என ஒரு மீட்டிங் போட்டுள்ளனர். அந்த மீட்டிங்கில் கேப்டன் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த தகவலே எனக்கு புதிதாக இருந்தது.
ஏன் இப்படி அந்த கேரக்டரில் நடிக்க வைக்க மீட்டிங் எல்லாம் போட்டு பேசுகிறார்கள். அதில் என்ன பிரச்னை என்று விசாரித்த போது, அந்த படத்தில் ஒரு காட்சியில் அந்த கேரக்டரின் காலில் உள்ள செருப்பை, கேப்டன் கழுவுவது போன்ற காட்சி வருகிறது. அதை ரசிகர்கள் ஒத்துக்க மாட்டார்கள். திரும்ப கேப்டன் என்னை அடிக்கும்போது அவர் செருப்பை நான் கழுவுவேன், அது வேற விஷயம்.
ஆனால் அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வைக்க எந்த வில்லன் நடிகர் சரியாக இருப்பார் என்று அந்த மீட்டிங்கில் ஆலோசித்த போது பொன்னம்பலம் என்று பேசி முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து கேப்டன் விஜயகாந்திடம் பேசி நான் நன்றி சொன்ன போது, அந்த கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்பது ரசிகர் மன்ற தலைவர்களின் முடிவு பொன்னம்பலம் என்று கேப்டனும் சொன்னார், அது எனக்கு சந்தோஷமாக இருந்தது என்று அந்த நேர்காணலில் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.





