கடந்த 1999ம் ஆண்டில் வெளியான சேது படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்தார். பாலு மகேந்திராவின் வளர்ப்பு என்பதை அட்டகாசமாகவும் அழுத்தமாகவும் சேது படத்தில் நிரூபித்தார். ஆளுமை நிறைந்த ஒரு படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து நந்தா நான் கடவுள் பிதா மகன் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த 2016ம் ஆண்டில் தாரை தப்பட்டை படம் வெளியானது. இதில் சசிக்குமார் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தனர். இந்த படம் இளையராஜாவின் 1000வது படம் என்ற சிறப்புக்குரியது.
தாரை தப்பட்டை படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்கு பின், இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படம் வெளியாகிறது. வரும் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். துவக்கத்தில் சூர்யா சில வாரங்கள் நடித்துவிட்டு பிறகு விலகியதால் அருண் விஜய் அந்த கேரக்டரில் நடித்துள்ளார்.
இயக்குனர் பாலா இதுவரை சூர்யா ஆர்யா விஷால் சசிக்குமார் விக்ரம் அதர்வா ஆகியோர் நடித்த படங்களை இயக்கியுள்ளார். அஜீத் குமார் நான் கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்து பிறகு விலகிக்கொண்டார். ரஜினி கமல் விஜய் போன்றவர்கள் பாலா படங்களில் நடிக்கவில்லை. அதற்கான முயற்சியும் பாலா எடுக்கவில்லை.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் இயக்குனர் பாலா கூறியதாவது, நான் கடவுள் படத்தில் அந்த கேரக்டரில் அஜீத்குமார் பொருந்துவாரா என்றால், பொருந்த வைக்க வேண்டியது என்னோட வேலை. ரெண்டு பேருக்குமே ஒரு படம் சேர்ந்து பண்ணிட வேண்டும் என்ற பரஸ்பர ஆசை இருந்தது. அது நிறைவேறாமல் போய் விட்டது.
கமலை வைத்தும் என்னால் படம் பண்ண முடியும். அதற்கான சரியான கைடுலைன்ஸ் எனக்கு கொடுத்துவிட்டால் அதை என்னால் செய்ய முடியும். அப்படி செய்யணும், இப்படி செய்யணும் என்ற ஒரு நிலை வந்தால் நான் டயர்டு ஆகி விடுவேன். என் போக்குல என்னை விட்றணும். என் போக்குல என்னை விடுவாரா என்பதுதான் சந்தேகம் என்று இயக்குனர் பாலா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





