தமிழ் சினிமா ரசிகர்களால் மட்டுமின்றி உலகம் முழுவதும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். ஆஸ்கர் விருது நாயகன், 7 முறை மத்திய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றவர். இசையில் இன்னும் ரசிகர்களின் மனங்களை வசியப்படுத்தும் வித்தையை கற்றவர்.
ஆனால் சமீபத்தில் அவரது மனைவி சாயிரா பானு, ஏஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்தார். இந்த ஆண்டில் 30வது திருமண ஆண்டை கொண்டாட வேண்டிய நிலையில், திடீரென இப்படி ஒரு அறிவிப்பை ஏஆர் ரகுமானின் மனைவி அறிவித்தது, ரசிகர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. உலகம் போற்றும் ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சிக்கலா என்று பலரும் கவலைப்பட்டனர்.
ஏஆர் ரகுமான், சாயிரா பானு தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருக்கிறார். இதில் மூத்த மகள் கதீஜாவுக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது. இன்னும் ஒரு மகள், மகன் திருமணம் செய்யப்பட வேண்டிய நிலையில் ஏஆர் ரகுமான், சாயிரா பானு பிரிவு என்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது காலத்தின் தீர்ப்பு, தவிர்க்க முடியாததாகி விட்டது என்பது போல ஏஆர் ரகுமானும் ஒரு பதிவிட்டு தன் வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இசைப்புயல் ஏஆர் ரகுமான் கூறியதாவது, இசை எப்பவுமே என்னை இளமையாக வைத்திருக்கிறது. இசை இளமையாக இருப்பதால் நானும் அப்படி இருக்கிறேன். தவிர, எதிர்மறை எண்ணங்களுக்கு அதிகமாக இடம் கொடுக்காததும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. சோகம் வருத்தம் தோல்வி போன்ற எண்ணங்களை தவிர்ப்பது மனதை இளமையாக்குகிறது.
பர்ஸ்ட் அப் ஆல் இந்த வாழ்க்கை நிலையானது இல்லே. சின்ன வயசுலேயே என் அப்பா இறந்துட்டார். அப்புறம் எங்க பாட்டி இறந்துட்டாங்க. நான் வளர்த்த நாய்க்குட்டியும் இறந்துடுச்சு. இப்படி எல்லாமே போனதுக்கு அப்புறம் வாழ்க்கை நிலையானது இல்லேன்னு புரிஞ்சிடுச்சு.
எனக்கு எது புடிச்சாலும் அது நம்மை விட்டு போயிடுது. கடவுள் இதை எனக்கு ஒரு பரிசோதனையா வாழ்க்கையில் கொடுத்திருக்காரான்னு தெரியலை. என் வாழ்க்கை ரொம்பவும் வித்யாசமா இருக்குது. இப்படிதான் நம்ம வாழ்க்கை இருக்கப் போவுதுன்னு ஆரம்பத்திலேயே தெரிஞ்சிடுச்சு. அதனால் அப்பவே முடிஞ்ச வரைக்கும் நல்லவனாக இருக்கலாம் என்று டிசைட் செய்துவிட்டேன் என்று அந்த நேர்காணலில் ஏஆர் ரகுமான் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





