தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். கடந்த 10 ஆண்டுகளாக அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் 2023ம் ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இதில் விஷால் எஸ்ஜே சூர்யா இருவருமே, அப்பா மகன், அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர். வித்யாசமான இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா மகனாகவும், அப்பாவாகவும், அதே போல் விஷால் அப்பாவாகவும் மகனாகவும் நடித்திருந்தது பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
மார்க் ஆண்டனி படத்தின் அபார வெற்றிக்கு பிறகுதான், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜீத்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த சூழலில் 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடந்த மதகஜ ராஜா படம் பொங்கலை முன்னிட்டு வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்த பட பிரமோசனுக்காக வந்த விஷால், உடல் பலவீனமாகி கை நடுக்கத்துடன் காணப்பட்டது, இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் விஷால் குறித்து நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது, விஷாலை போல ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கால கட்டத்தில் இருக்கிறான். விரைவில் அதில் இருந்து அவன் மீண்டு வருவான். அதற்கான தைரியம் அவனிடம் இருக்கிறது. அவனது தைரியம் அதற்கு துணை நிற்கும்.
என் நண்பன் விஷாலின் நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவில் சிங்கம் போல மீண்டு வருவான். ஆனால் அவனை பத்தி யாரும் தப்பாக பேசாதீர்கள் என்று அந்த நேர்காணலில் நடிகர் ஜெயம் ரவி, விஷாலின் உடல் நலம் குறித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





