நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற வெற்றி படங்களில் ஒன்று வானத்தை போல. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜயகாந்த் அண்ணன் தம்பி என 2 வேடங்களில் நடித்திருப்பார். மீனா வினிதா கௌசல்யா பிரபுதேவா லிவிங்ஸ்டன் ரமேஷ் கண்ணா ஆனந்த ராஜ் பாலு ஆனந்த் ராஜிவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கேப்டன் விஜயகாந்த் குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, பொள்ளாச்சிக்கு 20 கிலோ மீட்டர் தள்ளி காளிகாபுரம் என்ற கிராமத்து பகுதியில் வானத்தை போல படம் ஷூட்டிங் நடந்தது. வீடு ஷெட் போட்டு அங்கு காட்சிகளை படமாக்கினோம். இரவில் விஜயகாந்த் நடித்த 2 காட்சிகளை நான் எடுத்து முடிக்கிறேன். அப்போது இரவு 3 மணியாகி விட்டது.
எனக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆகும் நேரத்தில், எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் காட்சிக்கான ஒரு சீன் எடுக்க வேண்டும். அந்த ஷாட் காலை 6 மணிக்கு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேமராமேன் நினைக்கிறார். எனக்கும் அப்படி எடுக்க வேண்டும் என்று என்று தோன்றுகிறது.
ஆனால் இரவு 3 மணி வரை ஷூட்டிங்கில் நடித்துவிட்டு செல்பவரிடம், மீண்டும் காலை 6 மணிக்கு ஷூட்டிங் வரவேண்டும் என்று எப்படி சொல்வது என்று தர்ம சங்கடமாக இருந்தது. ஏனெனில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரூமுக்கு காரில் செல்லவே ஒரு மணி நேரம் ஆகி விடும். காலை 6 மணிக்கு அவரை வரச் சொல்வது சிரமமாக இருந்தது. அதே நேரத்தில் அவரது ஷெட்யூலும் நாளையுடன் முடிகிறது.
அந்த நேரத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் ஏறச் சென்ற விஜயகாந்திடம், சார் என்று அழைத்தேன். நான் தயங்கி நின்றதை பார்த்து, சொல்லுங்க சார் என்றார். காலையில் சூரிய உதயம் நேரத்தில் சில காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். உடனே, எத்தனை மணிக்கு சார் வரணும் என்று கேட்ட அவர், ரூமுக்கு போய் விட்டு காலையில் 6 மணிக்கு ரெடியாகி வந்துவிட்டார்.
இந்த மாதிரியான ஒரு ஒத்துழைப்பை எல்லாம் மற்ற ஹீரோக்களிடம் எல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. விஜயகாந்த் ஒருவரால்தான் முடியும். இரவு 3 மணி வரைக்கும் ஷூட்டிங் நடத்திவிட்டு காலை 6 மணிக்கு மீண்டும் வா என்றால் யாருமே வரமாட்டார்கள். அவரது அந்த அர்ப்பணிப்பை யாரிடமும் பார்க்கவே முடியாது என்று அந்த நேர்காணலில் இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.





