இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் படுதோல்விக்கு பிறகு நடிகர் ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் கேம் சேஞ்சர். தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவான இந்த படத்தில் கியாரா அத்வானி அஞ்சலி எஸ்ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் 10ம் தேதி வெளியான இந்த படம், புஷ்பா 2 அளவுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யாது என்பதை முதல் நாள் முதல் காட்சி பார்த்தவுடனே ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தி விட்டது. வழக்கமான ஷங்கர் படம் என்று முத்திரை விழுந்துவிட்டது.
ஆனால் இந்த படத்தின் கதை, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சொன்னது. கொரோனா தொற்று காலகட்டத்தில் இயக்குனர் லிங்குசாமி, தமிழ் சினிமா இயக்குனர்களுக்கான ஒரு வாட்சப் குரூப்பை உருவாக்கினார். அப்போது ஷங்கர் தனக்கு ஒரு கதை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்போது கார்த்திக் சுப்பராஜ் சொன்ன ஒரு கதை தான் கேம் சேஞ்சர் படமாக உருவாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக உள்ளார். ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கினார். மேலும் ஜிகர்தண்டா ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் போன்ற படங்களை இயக்கியவர். இப்போது சூர்யா நடித்துள்ள 45வது படம் ரெட்ரோ படத்தின் இயக்குனரும் கார்த்திக் சுப்பராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கேம் சேஞ்சர் படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, கேம் சேஞ்சர் படம் ஷங்கர் சாரின் பிரம்மாண்டமான மாஸ் அதிரடி படமாக உள்ளது. அதிரடியான அரசியல் பஞ்ச் வசனங்கள் மிகவும் ரசிக்க வைக்கிறது.
ஷங்கரின் இந்த பிரம்மாண்ட படத்தில் ஒரு சிறிய பகுதியாக இருக்க எனக்கு அனுமதி கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் ராம்சரண் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா பணியும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவிற்கு வாழ்த்துகள் என்று கார்த்திக் சுப்பராஜ் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.





