தமிழ் பேராசிரியர் கு ஞானசம்பந்தன், பட்டிமன்ற நடுவராக இருந்து வருகிறார். மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான இலக்கிய சொற்பொழிவாளர். சமீபகாலமாக திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் பல படங்களில் கு ஞானசம்பந்தன் நடித்திருக்கிறார். நடிகர் கமலின் நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கு. ஞானசம்பந்தன் கூறியதாவது. நான் ஒரு படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தேன். அதில் பாடல் காட்சி எடுத்துட்டு இருந்தாங்க. அப்போது விஜய் சேதுபதியிடம், ஐயா இங்க வாங்க, உங்ககிட்ட திருக்குறள் பத்தி ஒண்ணு கேட்கப் போறேன். இது நடந்தது ராத்திரி 2 மணி. கேட்குறது நடிகர் விஜய் சேதுபதி. நான் இதுவரை கேள்விப்படாத திருக்குறள் ஒன்றை நீங்க சொல்லணும் என்றார்.
வழக்கமாக சொல்லும் அகர முதல எழுத்தெல்லாம் மாதிரி சொல்லக் கூடாது. இதுவரை நான் கேள்விப்படாத ஒண்ணை சொல்லணும். உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன், என்றும் கூறினார். நீங்கள் பணம் எல்லாம் தர வேண்டாம். நான் சொல்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க, நம்ம உடம்பில் உடைக்க முடியாத எலும்பு எது என்று கேட்டேன்.
அது எந்த எலும்பு என்று என்னிடம் விஜய் சேதுபதி திருப்பிக் கேட்டார். இந்த தாடை எலும்புதான் உடையாத எலும்பு என்று சொன்னேன். இதை நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் சொல்றார். இப்படிப்பட்ட உறுதியான தாடை எலும்பை உடைச்சா தான் சில பேர் தானம் தர்மம் பண்ணுவான். இது ஒரு தீவிரவாத குறள் மாதிரி இருக்கும்.
அன்புடமை எழுதின திருவள்ளுவர்தான் இப்படி சொல்லி இருக்கிறார். எச்சிக் கையில் காக்கா ஓட்டாதவன் கஞ்சன் என்று சொல்வோம். அப்படிப்பட்ட ஒருத்தன் கிட்ட உதவி கேட்டால் உடனே கிடைக்காது. தாடை எலும்பு உடையற மாதிரி அடித்தால்தான் அவன் உதவி செய்வான் என்று திருவள்ளுவர் கூறிய குறள் பற்றி சொன்னேன்.
மாஸ்டர் படத்துல நீங்க கையை மடக்கி இப்படி குத்துவீங்களே, அதே மாதிரி குத்தி தாடையை உடைக்கணும் என்று அன்றே திருவள்ளுவர் சொல்லிவிட்டார் என்றேன். இதை கேட்டவுடன் ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்த விஜய் சேதுபதி, இப்படி ஒரு குறளை என் வாழ்க்கையில் கேள்விப்பட்டதே இல்லை என்று கூறினார். அந்த குறளை கேட்டு எழுதி வைத்துக்கொண்டார் என, பட்டிமன்ற நடுவர் மற்றும் நடிகர் கு ஞானசம்பந்தன் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.





