ஜெயம் ரவி என்னும் தனது பெயரை திடீரென ரவி மோகன் என்று மாற்றினார் நடிகர். அவரது திடீர் இந்த முடிவால் பலரும் ஆச்சரியமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே ரவி மோகனுக்கு வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வி படமாகவே அமைந்து வருகின்றன.
இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் அவருக்கு ஓரளவு நல்ல பேரை பெற்றுக் கொடுத்தது. அருள்மொழிவர்மனாக தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு அவரது நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியாகிவிட்டது. இதில் எதுவும் சுமாரான வெற்றியை கூட பெறவில்லை.
ஏற்கனவே அதற்கு முன்பாக அவர் நடித்த பூமி, வனமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த அகிலன் என்னும் திரைப்படம் வந்தது கூட இங்கு பலருக்கும் தெரியாது. பிறகு நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து இறைவன் என்னும் திரைப்படத்தை கொடுத்தார்.
அதுவும் சரியாக போகாத நிலையில் அடுத்தடுத்து வெளியான சைரன் மற்றும் பிரதர் ஆகிய இரண்டு படங்களும் ரவி மோகனுக்கு பின்னடைவையே கொடுத்தது. இப்படியான சூழலில் தான் அவர், காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், நித்யா மேனன் கதாநாயகியாக வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான இழுக்குதடி பாடல் ஹிட் அடித்திருந்தது. டிரைலரும் பலருக்கும் பிடித்திருந்த சூழலில், காதலிக்க நேரமில்லை திரைப்படம் கலவையான விமர்சனத்தையே தற்போது பெற்று வருகிறது.
கணவரை பிரிந்த நிலையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் நித்யா மேனன், தாய்மை அடைகிறார். அது ரவி மோகன் தனது விந்துவை அளித்த தானம் மூலம் நித்யா மேனன் கருவுற்று இருப்பது போல் கதை நகர்கிறது. பிறகு இருவரும் பெங்களூரில் சந்திக்க அதன் பிறகு நடைபெறும் காதல் சம்பவங்கள் தான் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் கதை. புதுவிதமான கதையை கிருத்திகா உதயநிதி எடுத்திருந்தாலும் அது ஆழமாக பதியவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், இயக்குனரின் புதிய முயற்சிக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





