நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு சினிமாவுக்கு குட்பை சொல்லும் நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பணிகளை முழுவீச்சில் கவனிக்க போகிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தயாராகிறார்.
இதற்கான தமிழ்நாடு முழுவதும் மக்கள் நேரடி சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் விஜய், மாவட்டம் வாரியாக தொகுதி வாரியாக மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தனது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் தனது அரசியல் எதிர்கால திட்டங்கள் மக்கள் பணிகள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தி நேரடியாக விளக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி. இவர் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கியவர். அதே போல் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் அனுராக் காஷ்யப்புக்கு மிரட்டலான பின்னணி குரல் கொடுத்தவர் மகிழ்திருமேனிதான்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மகிழ் திருமேனி கூறியதாவது, நடிகர் விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும். நான் விஜயை நேரில் சந்தித்த போது அவரிடம் 3 கதைகளை சொன்னேன். அந்த 3 கதைகளுமே அவருக்கு பிடித்து விட்டது.
ஆனால் இந்த 3 கதைகளில் எந்த கதையை தேர்வு செய்வது என்பதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. அதனால் நான் அந்த 3 கதைகளில் ஒரு கதையை மட்டும் தேர்வு செய்து சொன்னேன். அந்த கதை அவருக்கும் பிடித்திருந்தால் உடனே சரி என்று சொல்லிவிட்டார்.
ஆனால் நான் அப்போது வேறு ஒரு படத்தை இயக்குவதற்காக உதயநிதி ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டேன். அதனால் நான் அந்த படத்துக்கு முன்னுரியை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் விஜய் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் விஜய்க்கு நான் சொன்ன 3 கதைகளும் இப்போதும் என்னிடம்தான் உள்ளன, என்று மகிழ்திருமேனி கூறியிருக்கிறார்.





