சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே உள்ளது. இதையடுத்து வான்வழி விமான சேவை வசதிக்காக சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் விமான நிலையத்துக்காக பரிந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களிலிருந்து நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
பரந்தூரில் ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்.
தங்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதற்காக பரந்தூர் பகுதி பொதுமக்கள் மற்றும் அங்கு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் போராட்ட குழுவினர் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் போராட்டம் நடத்தும் பரந்தூர் மக்களை நேரில் சந்திக்க நடிகர் தவெக தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டார்.
இதற்காக தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போலீசார் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இதற்காக வரும் 19ம் தேதி அல்லது 20ம் தேதிகளில் அதாவது நாளை ( ஞாயிறு) அல்லது நாளை மறுதினம் (திங்கள்) பரந்தூருக்கு நடிகர் விஜய் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் 20ம் தேதி திங்கள் அன்று தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி அளித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் நடிகர் விஜய்க்கு போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளனர். அதன்படி குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே மக்கள் சந்திப்பு நடக்க வேண்டும். சந்திப்பின்போது அதிகப்படியான கூட்டத்தை கூட்டக்கூடாது.
அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அங்கு வரவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை முடித்து விட வேண்டும் என கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாடுகளை ஏற்று போராட்டக் குழுவை நடிகர் விஜய் சந்திப்பார் என தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முதன்முறையாக நடிகர் விஜய் போராட்டக் களத்தில் நிற்கும் மக்களை சந்திக்க பரந்தூர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





