தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவர் 50 பரோட்டா சாப்பிடும் போட்டியில் காமெடி காட்சியில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு பல படங்களில் அவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் பல படங்களில் காமெடி கேரக்டர்களிடம் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் சூரி. குறிப்பாக சிவகார்த்திகேயன் – சூரி காமெடி கூட்டணி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ரஜினி முருகன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சீமராஜா மனங்கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன், சூரி காமெடியில் கலக்கினர்.
தொடர்ந்து ரஜினி விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா ஜெயம் ரவி விஷ்ணு விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் காமெடி கேரக்டரில் நடித்த சூரி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வெற்றி பெற்றார். யதார்த்தமான அவரது முகபாவனைகளும் டயலாக் டெலிவரியும் உடல் மொழியும் காமெடியில் நல்ல ஒரு இடத்தை சூரிக்கு பெற்றுத் தந்தது.
இந்த சூழலில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை விடுதலை படத்தில் கதாநாயகனாக மாற்றினார். அந்த படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் சூரி வாழ்ந்திருந்தார். ஒரு காமெடி நடிகருக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு அறிமுக கதாநாயகன் போல இந்த படத்தில் சூரியின் நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி ஆகிய படங்களில் நடித்த நடிகர் சூரி இப்போது விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் ஓடக்காரி பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் கட்டாகுஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.இந்த படத்தில் அவர் முதன்முறையாக நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த சூழலில் சூரியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் புதிய படத்தை ஆர்எஸ் இம்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து படங்களில் ஹீரோவாக சூரி கமிட்டாகி வருவதால், இனி காமெடி பக்கமே வர மாட்டாரா என்று ரசிகர்கள் ஆதங்கமாக கேள்வி எழுப்புகின்றனர்.





