தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். வேட்டையாடு விளையாடு காக்க காக்க விண்ணைத் தாண்டி வருவாயா வாரணம் ஆயிரம் போன்ற ஸ்டைலிஷான படங்களை தந்தவர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்ற பன்முக தன்மை கொண்ட திறமையாளர்.
துவக்கத்தில் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிய கௌதம் மேனன், ஒரு கட்டத்தில் படங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அதேபோல் நடிகராகவும் கௌதம் மேனன் மாறினார். ஆனால் தயாரிப்பாளரான பின்பு கௌதம மேனன் பல பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டது.
அதனால் அவரது டைரக்சனில் படங்கள் வருவது வெகுவாக குறைந்து போனது. சியான் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமல் முடங்கி கிடக்கிறது. இதற்கு கௌதம் மேனனுக்கு இருக்கும் கடன் பிரச்னைகளே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மலையாள திரையுலகில் ஏற்கனவே நடிகராக கால் பதித்துள்ள கௌதம் மேனன், இப்போது முதல்முறையாக மலையாளத்தில் படத்தை இயக்கவும் துவங்கியிருக்கிறார். நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். அந்த படம் நாளை வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் கௌதம் மேனனிடம், அவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கௌதம் மேனன், எந்த படம் பற்றி கேட்கிறீர்கள். அது என் படம் அல்ல, அது யாரோ ஒருவருடையது. அதில் வந்த பாடல்களை மட்டும் தான் நான் இயக்கியிருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
அந்த படப்பிடிப்பின் போது தனுஷ் செய்த சில பிரச்சனைகளால் படம் வெளிவர தாமதமானதாக அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கதை விஷயத்திலேயே தனுஷ் மிகப்பெரிய அளவில் குறிக்கீடு செய்திருக்கிறார் என்பதும், அது தன்னுடைய படமே அல்ல என்று சொல்லும் அளவிற்கு கௌதம் மேனன் அந்த படத்தின் மூலம் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது இந்த நேர்காணலின்போது தெரியவந்துள்ளது. ஒரு இயக்குனர் அது என்னுடைய படமல்ல என்று சொல்லும் அளவுக்கு தனுஷ் டார்ச்சர் இருந்ததா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.





