நடிகர் அஜீத்குமார், இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைய இருக்கிறது. அதற்கு பின் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. அஜீத் பிறந்த நாளான மே 1 அன்று விடாமுயற்சி திரைக்கு வருகிறது.
இப்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, கட்சி பணிகளில் தீவிரமாக இறங்க இருப்பதால், மார்ச் 31 வரை மட்டுமே, வெங்கட்பிரபுவுக்கு கால அவகாசம் தரப்பட்டுள்ளது. அதற்குள் படப்பிடிப்பு குறித்த அனைத்தையும் முடித்துவிட, விஜய் தெளிவாக கூறிவிட்டார்.
எனினும் லியோ போல் இல்லாமல், கோட் படத்தை விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சிறந்த படமாக மக்கள் பாராட்டும் வகையில், வெங்கட்பிரபு அதிக மெனக்கெட்டு வருகிறார். பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, வைபவ், அஜ்மல் மற்றும் ரம்யா கிருஷ்ணன், கனிகா, லைகா, சிநேகா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திர பட்டாளத்தையே களத்தில் இறக்கி விட்டுள்ளார்.
இந்த படத்தை இயக்கியதற்காக விஜய் பாராட்டுவதை காட்டிலும், நடிகர் அஜீத்குமார் தன்னை போனிலோ நேரிலோ அழைத்து பாராட்ட வேண்டும் என்ற லட்சியத்தில் இந்த படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. ஏனெனில் இதற்கு பின்னணியில் சில விஷயங்கள் நடந்திருக்கிறது. அதுதான் இயக்குநர் வெங்கட்பிரபுவின் லட்சியத்துக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
அதாவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அஜீத்குமாரை கதாநாயகனாக வைத்து வெங்கட்பிரபு இயக்கிய படம் மங்காத்தா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு மங்காத்தா 2 படத்தை இயக்க வெங்கட்பிரபு ஆசைப்பட்ட நிலையில், அஜீத்குமாரிடம் எந்த ரெஸ்பான்சும் இல்லை. பலமுறை வெங்கட்பிரபு அழைத்தும் அஜீத் பேசவில்லை. இதற்கு காரணம், அந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜூனுக்கு கடைசி சில காட்சிகளில் அஜீத்தை விட அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாக, படம் பார்த்த ரசிகர்களிடம் விமர்சனம் எழுந்தது. இதனால் டைரக்டர் வெங்கட்பிரபு மீது அதிருப்தியடைந்தார் அஜீத்.
இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வைபவ், உறுதிப்படுத்தினார். பலரும் மங்காத்தா 2 எப்போது வரும் என்று கேட்கின்றனர். இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால், அஜீத்குமாரிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்று வெங்கட்பிரபுவே என்னிடம் கூறினார், என்ற விவரத்தை அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். மங்காத்தா, விடாமுயற்சி படங்களில் நடித்திருக்கிறார் வைபவ் என்பது குறிப்பிடத்தக்கது.





